Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’முதலமைச்சரை மாற்றும் நிலை ஏற்படும்’ - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் எச்சரிக்கை

'முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் சரியில்லை எனில், அவரை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டி வரும்' என்று டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

பழனியப்பன்


அணிகள் இணைப்பு தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் தீவிர ஆலோசனை நடத்திவருகின்றனர். இணைப்பு தொடர்பாக, அடுத்த  இரண்டு அல்லது மூன்று நாள்களில் நல்ல முடிவு எட்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்த நிலையில், அடுத்தகட்ட நகர்வுகள்குறித்து அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வி.பி.கலைராஜன், வெற்றிவேல், பழனியப்பன் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். 
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் பழனியப்பன், வெற்றிவேல் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய பழனியப்பன், ''மேலூரைத் தொடர்ந்து அடுத்தபடியாக நடக்க உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். பொதுச்செயலாளர் சசிகலாவின் ஆலோசனைகளின்படியே இந்தக் கூட்டம் இன்றைக்குக் கூட்டப்பட்டது. அடுத்தகட்ட நகர்வுகள், செயல்பாடுகள்குறித்து ஆலோசனை நடத்தினோம். இந்த அரசை ஊழல் அரசு என்று ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் விமர்சித்திருந்தார், சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கக் கோரி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த இருப்பதாக அவர்கள் அறிவித்தனர். ஆனால், இப்போது இரு அணிகளும் இணையப்போவதாகப் பேசுவது பதவியைக் காத்துக்கொள்வதற்கான சுயநல அரசியல்.

அ.தி.மு.க. என்பது பேருந்தைப் போன்றது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்தவுடன், இந்தப் பேருந்தின் ஓட்டுநராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். அதன்பின்னர், சசிகலாவின் உதவியுடன் ஓட்டுநராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். அ.தி.மு.க எனும் இந்தப் பேருந்தை, அவர் சரியான திசையில் இயக்கவில்லையோ என்ற உணர்வு எங்களுக்கு ஏற்படுகிறது. அது உறுதியாகும்பட்சத்தில், ஓட்டுநரை மாற்றும் நடவடிக்கைகளை எடுக்கத் தயங்க மாட்டோம். ஆட்சியைக் கலைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால், அந்தச் சூழலை அவர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டாம். மேலூர் பொதுக்கூட்டத்தில் 20 எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டோம். அந்த எண்ணிக்கை இன்றும் குறையவில்லை. எம்.எல்.ஏ-க்கள் சிலர், சொந்த வேலை மற்றும் கட்சிப் பணிக்காகச் சென்றுள்ளனர். எனவே, தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை குறையவில்லை'' என்று அவர் தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement