வெளியிடப்பட்ட நேரம்: 16:21 (19/08/2017)

கடைசி தொடர்பு:16:33 (19/08/2017)

சர்ச்சைக்குரிய கிணற்றை ஒப்படைக்க ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல்

தேனி மாவட்டம்,லெட்சுமிபுரத்தில் உள்ள சர்ச்சைக்குரிய கிணற்றை பொதுமக்களுக்கு வழங்க, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. 


தேனி மாவட்டம் லெட்சுமிபுரத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்குச் சொந்தமாக ராட்சசக் கிணறு உள்ளது. அந்தக் கிணறு, அவரது மனைவியின் பெயரில் இருந்துவந்தது. அந்த ராட்சசக் கிணற்றால்தான் தங்கள் கிராமத்தின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டதாக, சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாக லெட்சுமிபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால், தனது நண்பர் பெயருக்கு அந்தக் கிணற்றை எழுதிவைத்துவிட்டார் பன்னீர்செல்வம்.

 அந்தக் கிணறு விவகாரம், நீண்ட காலமாக முடிவை எட்டாமலேயே இருந்துவந்தது. அதனால், லெட்சுமிபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் இறங்கினர். இந்நிலையில், லெட்சுமிபுரத்தில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய ராட்சசக் கிணறு மற்றும் 18 சென்ட் நிலத்தை பொதுமக்களுக்கு வழங்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. அதற்கான பத்திரப்பதிவு, வரும் திங்கள்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால், லெட்சுமிபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.