'அ.தி.மு.க அணிகள் இணைப்பு': என்ன சொல்கிறார் முதல்வர் பழனிசாமி?

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.முக-வில் பல்வேறு அணிகள் உருவாகின. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணிகள், இணைவதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இரண்டு அணிகளும், மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் வைத்து இணைவதாகக் நேற்று தகவல் பரவியது. ஆனால், பேச்சுவார்த்தையில் இழுபறி நடந்து வருவதால் இணைப்பு ஏற்படவில்லை. இதனிடையே,"இரு அணிகள் இணைப்பு குறித்து ஓரிரு நாள்களில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்" என்று பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக எடப்பாடி பழனிசாமி திருவாரூர் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மேகதாது பற்றி பல்வேறு கட்சிகள், தமிழக அரசை விமர்சனம் செய்துகொண்டிருக்கின்றனர். உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் இறுதிவாதம் நடைபெற்று வருகிறது. கர்நாடக அரசு அணைக்கட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் சமதள நிலப்பரப்பு காரணமாக, புதிய அணைகள் கட்ட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கூறியுள்ளோம்.

கர்நாடகாவில் அணை கட்டுவதற்கு அம்மா அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இது விவசாயிகள் நலனுக்காகச் செயல்படும் அரசு. ஜெயலலிதா தனது ஆட்சியில் ஏராளமான திட்டங்களை மக்களுக்கு தந்துள்ளார். எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கத்தை, அம்மா சிறப்பாக வழிநடத்தி சென்றுகொண்டிருந்தார். அவரின் மறைவுக்குப் பிறகு, சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இரு அணிகள் இடையேயும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இரண்டு அணிகளும் இணையும்" என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!