‘இரண்டு நாள் பொறுத்திரு!' தினகரனுக்கு சசிகலாவின் கட்டளை | Just wait for two days: Sasikala orders Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 19:39 (19/08/2017)

கடைசி தொடர்பு:19:39 (19/08/2017)

‘இரண்டு நாள் பொறுத்திரு!' தினகரனுக்கு சசிகலாவின் கட்டளை

சசிகலா, தினகரன்

சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து தினகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘இரண்டு நாள் பொறுத்திரு’ என்று தினகரனிடம் சசிகலா சொன்னதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலாவுக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர் பெங்களூருக்குச் சென்று சசிகலாவைச் சந்தித்தனர். கோயில் பிரசாதத்தை சசிகலாவிடம் கொடுத்தனர். சசிகலாவிடம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது, சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் கண்கள் கலங்கின. உடனடியாக சசிகலா, யாரும் வருத்தப்பட வேண்டாம். எல்லாம் விதிப்படி நடக்கிறது. விரைவில் வெளியில் வந்துவிடுவேன் என்று ஆறுதலாகச் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு தினகரனைத் தவிர மற்றவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். பின்னர், சசிகலாவும் தினகரனும் அ.தி.மு.க. உள்கட்சி நிலவரம் குறித்து நீண்ட நேரம் பேசினர்.

சசிகலா, கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாக தினகரன் பதிலளித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைவது குறித்தும் இருவரும் பேசியுள்ளனர். அதன்பிறகு சென்னையிலிருந்து தினகரன் கொண்டுச் சென்ற ஃபைலை சசிகலாவிடம் கொடுத்துள்ளார். அதை முழுமையாகப் படித்த சசிகலா, இந்த பட்டியலை இப்போதைக்கு வெளியிட வேண்டாம். இரண்டு நாள் அமைதியாக இருப்போம் என்று சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து, சசிகலாவிடம் விடைப்பெற்றுவிட்டு தினகரன் வெளியில் வந்தார். நிருபர்களைச் சந்தித்த தினகரன், ‘என் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் ஸிலிப்பர் செல்களைப் போல உள்ளனர். அ.தி.மு.க. உள்கட்சி நிலவரம் குறித்து ஆலோசித்ததாக’த் தெரிவித்தார்.

இதையடுத்து பெங்களூரிலிருந்து சென்னைக்கு தினகரன் திரும்பி வந்தார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினரும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் ஜெயலலிதா சமாதியில் இணையப்போவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தினகரனின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். தற்போது, இரு அணிகளும் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தினகரனிடம் தெரிவித்தனர். 

உடனே, 'கூட்டத்தில்  என்ன நடக்கிறது என்பதைக் கவனித்து உடனுக்குடன் எனக்கு தகவல் தெரிவியுங்கள்' என்று ஆதரவாளர்களிடம் தினகரன்தெரிவித்தார். அதன்படி, தினகரனுக்கு இரு அணிகளில் நடந்த ஆலோசனை விவரம் லைவ் ரிப்போர்ட்டாக கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா சமாதி நிலவரம் வரைக் கேட்டறிந்த தினகரனுக்கு சென்னை வந்திறங்கிய சமயத்தில் அணிகள் இன்று இணையவில்லை என்ற தகவல் சொல்லப்பட்டது. அணிகள் இணைப்பு குறித்து தினகரன் தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அணிகள் இணையும்போது நமக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து விளக்கமாக தெரிவித்துள்ளார். அடுத்து, சசிகலாவிடம் நடத்திய ஆலோசனைக்குறித்து ஆதரவாளர்களிடம் தினகரன் பகிர்ந்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைவதை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் சசிகலா, தினகரனுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அதை சட்டப்படி எதிர்கொள்வோம். இதுதொடர்பாக பெங்களூருவில் சசிகலாவும் தினகரனும் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, 'சீராய்வு மனு விசாரணையில் நமக்கு சாதகமான தீர்ப்பு வந்தால்போதும். அதுவரை  அமைதியாக இருப்போம். அணிகள் இணைந்து நமக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்குத்தான் அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்படும். இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்த வேண்டும்.  உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரவுள்ளது. அதையெல்லாம் நம்முடைய ஆதரவு இல்லாமல் தனியாக அவர்களால் எதிர்கொள்ள முடியாது' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 'இரண்டு அணிகள் இணையும் போது கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். குறிப்பாக, ஒன்மேன் ஆர்மியாக இருந்த அ.தி.மு.க.வில் அதிகார மையங்கள் உருவாகும். அதையெல்லாம் சமாளிக்க முடியாது. ஜெயலலிதாவால் அ.தி.மு.க, ராணுவ கட்டுப்பாட்டோடு செயல்பட்டது. ஆனால், இன்று நிலைமைப் அப்படியல்ல. கட்சியை கட்டுப்பாட்டோடு வழிநடத்த முடியாது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வம் இணைந்தாலும் அது நிரந்தரமல்ல. விரைவில் இரண்டு அணிகளுக்குள் கருத்துவேறுபாடு ஏற்படும்' என்று தினகரனிடம் சசிகலா விரிவாகச் சொல்லியிருக்கிறார். இதனால்தான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். அதை மனதில் வைத்துக் கொண்டுதான் தினகரன், அமைதியாக இருந்துவருகிறார்.

சசிகலாவையும் தினகரனையும் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு அறிவிப்பு வெளியாகினால் அதைச் சட்டப்படி எதிர்கொள்வோம். சீராய்வு மனு விசாரணைக்குப்பிறகு  எங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடங்கும். அதுவரை அமைதியாக இருப்போம்.தற்போது பதவியில் உள்ளவர்கள் அனைவரும் மனசாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டும். இந்த பதவியை வழங்கியது யார் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். சசிகலாவும் தினகரனும் இல்லையென்றால் முதல்வரும், அமைச்சரும், கட்சிப்பதவிகளும் யாருக்கும் கிடைத்திருக்காது" என்றனர் ஆவேசமாக.

தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.வான பழனியப்பன் கூறுகையில், “பொதுச் செயலாளர் சசிகலா உத்தரவின்பேரில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்து ஆலோசிக்கப்பட்டது. அ.தி.மு.க பேருந்தில் ஓட்டுநராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். தற்போது சசிகலாவின் தயவால் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அ.தி.மு.க.வை சரியாக நடத்தவில்லை என்றால்  முதல்வரை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்" என்று எச்சரித்தார்.

சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக அ.தி.மு.க.வில் நடவடிக்கை  எடுக்கப்பட்டால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆட்சியை கவிழ்க்கவும் தயங்க மாட்டார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தினகரனின் நம்பிக்கைக்குரிய எம்.எல்.ஏ. ஒருவரிடம் கேட்ட போது, “அ.தி.மு.கவுக்கும் ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து ஆட்சியை காப்பாற்ற துடிக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பா.ஜ.க.விடம் நட்புடன் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், நிச்சயம் எடப்பாடி பழனிசாமிக்கும் ஒருநாள் துரோகம் செய்வார். எங்களால் இந்த ஆட்சிக்கு நிச்சயம் ஆபத்து ஏற்படாது. ஆனால் அவர்களை ஆட்சியை அழித்துவிடுவார்கள்” என்றார்.


டிரெண்டிங் @ விகடன்