கொட்டும் மழை... இரவில் மெரீனாவை அழகாக்கிய இருவர்! | Salute janaki and ammu; Workers in marina

வெளியிடப்பட்ட நேரம்: 15:27 (20/08/2017)

கடைசி தொடர்பு:11:14 (22/08/2017)

கொட்டும் மழை... இரவில் மெரீனாவை அழகாக்கிய இருவர்!

 

டந்த 17-ம் தேதி இரவு சென்னையில் நல்ல மழை! சரி... மழை நேர இரவில் சென்னையைச் சுற்றி வரலாம் என்று பைக்கில் கிளம்பினோம். ஊரெல்லாம் சுற்றிவிட்டு மெரினா கடற்கரையை அடையும்போது மணி 12.30. அந்த நேரத்தில் காவலர்கள் வாகனத்தில் இருமுறை ரோந்து வந்தனர். ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டும் சாலையில் சென்றுகொண்டிருந்தன. மற்றபடி கொட்டும் மழையில், காமராஜர் சாலை வெறிச்சோடிக் கிடந்தது. மழை சாரல், விளக்குகள் வெளிச்சம், கடல் காற்று என அந்த சாலையே மிக ரம்மியமாக இருந்தது. 'சரி வீடு திரும்பலாம்' என பைக்கைத் திருப்பும்போது கலங்கரை விளக்கத்தின் அருகே யாரோ இரண்டு பெண்கள் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தனர். கொட்டும் மழையில், யார் இவர்கள் என அருகில் சென்று பார்த்தபோது, ''அங்க குப்ப கெடக்கு பாரு... அத அள்ளு, நான் இந்தக் குப்பைய அள்ளிட்டு வரேன்'' என்று இரண்டு துப்புரவு பணியாளர்கள் மழையில் நனைந்தபடி மும்முரமாக தங்களின் வேலையை செய்துகொண்டிருந்தனர். 

மெரீனா

அவர்களிடம் பேச்சு கொடுத்தோம். ஜானகி, அம்மு என்று தங்கள் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டவர்கள், "வேலைன்னு வந்துட்டு வெயில், மழையெல்லாம் பாத்தா பொழப்பு ஓடுமா..?'' என்றனர்.

"எனக்கு நாப்பது வயசாகுது, அம்முவுக்கு 28 வயசாகுது. ரெண்டு பேருமே ஐஸ்ஹவுஸ்லதான் தங்கியிருக்கோம்'' எனப் பேச ஆரம்பித்தார் ஜானகி. ''எனக்கு மூணு புள்ளைங்க, இவளுக்கு ரெண்டு புள்ளைங்க இருக்காங்க. அவங்கள படிக்க வச்சி காப்பாத்தணுமே. ரெண்டு வருஷமா இந்த வேலைய பாத்துக்கிட்டிருக்கோம். இதுக்கு முன்னாடி கிடைச்ச வேலைய செஞ்சி வந்தோம். இப்ப இந்த வேலை கெடச்சிருக்கு... வேலைய விடமுடியாதுல. அதனாலதான் மழைன்னு பாக்காம வேலை செஞ்சிட்டு வரோம். எப்படியா இருந்தாலும் இந்த இடத்த நாங்கதான் சுத்தப்படுத்தணும். அதுவும் விடியறதுக்குள்ள செஞ்சாகணும். மழையலாம் பாத்தா சுத்தப்படுத்த முடியுமா? நைட்ல இந்த வேலைய பாப்போம். பகல் நேரத்துல வேற ஏதாவது கிடைக்குற வேலைய செஞ்சிட்டு காலத்த ஓட்டிக்கிட்டிருக்கோம். என்ன பண்றது எங்கள நம்பி வீட்ல புள்ளைங்க இருப்பாங்களே. புருஷன் இருந்தாலும் பரவாயில்ல. எங்களையும் எங்க புள்ளைங்களையும், சந்தோஷமா வச்சி காப்பாத்தியிருப்பாரு. என் புருஷன் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி இறந்திட்டாரு. அம்முவோட புருஷன் இப்போ இவ கூட இல்ல. அதனாலதான் நாங்க பகல்ல கிடச்ச வேலைய செஞ்சிக்கிட்டு, இந்த வேலையை ராத்திரி நேரத்துல செஞ்சிக்கிட்டு வரோம்" என்றார். ''சரிம்மா மழை விட்டதுக்கு அப்பறமா வேலையை செய்யலாமே'' என நாம் கேட்க... ''மழை எப்படியும் விடாது சார்.. மழைக்கு ஒதுங்கி விடுஞ்சிருச்சுனா குப்பை இருக்கும். அப்படி குப்பை இருந்தா லீவ் நாள் கணக்காகிடும். சம்பளம் வராதே. சாலையை சுத்தமா வச்சிக்குறதுக்குத்தான் வேலைக்கு வந்திருக்கோம். அதனால சீக்கிரமே முடிச்சிரலாமேனுதான் இப்போ செய்யுறோம். ஆரம்பத்துல இந்த வேலை கஷ்டமா இருந்தாலும் இப்போ இந்த வேலை ரொம்பப் புடிச்சிருக்கு. நம்ம வீட்டுல ஒரு மூலையில் கொஞ்சம் குப்பை கெடந்தாலும் நமக்கு எப்படி அருவறுப்பா இருக்கும். அதுபோலதான் இதுவும். லட்சக்கணக்கான மக்கள் வந்துபோற மெரினாவ சுத்தமா வச்சிக்குறோம். எவ்வளவு குப்பை வந்தாலும் அலுத்துக்காம எங்க வேலைய பாக்க ஆரம்பிச்சிருவோம்'' என்று முடித்தார் ஜானகி.

அம்மு மற்றும் ஜானகி

"உடம்பு நல்லா இருக்கும்போது எவ்வளவு குப்பை போட்டாலும் சுத்தப்படுத்திடுவோம். என்னைக்காவது உடம்பு சரி இல்லனா வேலையே செய்ய முடியாது. அப்போ பீச்சுக்கு வர மக்கள்கிட்ட குப்பையா போடாதீங்கன்னு சொல்லுவோம். பல பேரு சரி போடமாட்டோம்னு சொல்லுவாங்க. சில பேரு உங்க வேலை கூட்டி சுத்தப்படுத்துறதுதானேன்னு சொல்லி கேவலப்படுத்துவாங்க. எங்களால எதுவும் சொல்லமுடியாது. உடம்பு முடியலைனாலும் பல முறை கூட்டி குப்பையை அள்ளிடுவோம். ராத்திரி நேரத்துல இங்க வேலை செய்யும்போதுலாம்  தண்ணியடிச்சிட்டு வர்ற பலபேர் எங்களைத் திட்டுவாங்க. இல்லனா வேற மாதிரி பேசுவாங்க. அப்பலாம் நாங்க அந்த இடத்த விட்டு வந்துடுவோம். சில நேரம் ரவுண்ட்ஸ் வர போலீஸ் கிட்ட சொல்லுவோம். ஒருவேளை எங்க அதிகாரிங்கக்கிட்ட சொன்னா... இதுக்குத்தான் பொம்பளைங்கள வேலைக்கு வைக்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க. அப்பறம் வேலை போகும். ஏன் வம்பு? எங்க புள்ளைங்க நல்லா இருக்கணும்ல... அதுக்காக எவ்ளோ கஷ்டம் வந்தாலும் தாங்கிக்கிட்டு வேலைய செய்றோம். இங்க வர மக்கள்கிட்ட நாங்க சொல்றது ஒண்ணே ஒண்ணுதான்... முடிஞ்ச வரைக்கும் குப்பைகளை போடாதீங்க. பீச்ல மட்டுமல்ல... உங்க தெருவிலேயும் குப்பைகளை போடாதீங்க. சில நேரம் அந்த குப்பைகள் அழுகிப்போய் துர்நாற்றம் அடிக்கும். உங்களால அதக் கடந்துகூட போகமுடியாது. ஆனா நாங்க அள்ளுவோம். அப்பலாம் கஷ்டமா இருக்கும். அதனால் முடிஞ்சளவு குப்பையை தொட்டியில போடுங்க. எவ்ளோ அசிங்கப்பட்டாலும் இந்த வேலைய சந்தோஷமா செய்ய ஒரு காரணம் இருக்கு... 'இந்த மெரீனா அழகா இருக்குறதுல எங்களுக்கும் ஒரு பங்கு இருக்கு'ன்ற எண்ணம் தான் எங்கள எப்பவுமே சுறுசுறுப்பா வச்சிருக்கு." என சொல்லும் அம்முவின் கண்களில் ஏதோ சாதித்துவிட்ட மகிழ்ச்சி தெரிந்தது.

உண்மையில் இவர்களும் சாதனையாளர்களே... 100 மனிதர்கள் கூடினாலே ஒரு இடம் குப்பை கிடங்காக மாறிவிடும். அப்படியிருக்க தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கூடும் ஒரு இடத்துக்கு வந்து செல்லும்போது எவ்வளவு குப்பைகள் சேரும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். 'மெரினா... வெறும் கடலும், மணலும் சேர்ந்தது மட்டுமல்ல... இவர்களின் உழைப்பால் விளைந்த சுத்தமும், அழகும் சேர்ந்ததுதான்' என்பதை மனதில் நினைத்துக்கொண்டு நாங்கள் கிளம்பத் தயாரானோம். அவர்களும் மெரினாவை அழகுபடுத்த அந்தக் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், தங்களின் வேலையைத் தொடர ஆரம்பித்தனர்.


டிரெண்டிங் @ விகடன்