Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இலை'-கள் உதிர்ந்தன..அடிப்படை வசதிகளின்றி அல்லாடும் ஆர்.கே. நகர்!

"கடந்த 3 நாட்களாக கொட்டித் தீர்க்கிறது மழை.  சிறு மழைக்கும், சிதிலமடையும் வழக்கத்தைக் கொண்ட சென்னை சாலைகள், இந்தப் பெரு மழையில் தப்பமுடியுமா? இந்த சூத்திரத்துக்கு அப்படியே பொருந்தக்கூடிய ஒரு சாலை - 'ஆர்.கே நகர் 47-வது வட்டத்தின் ராதாகிருஷ்ணன் நகர் சாலை'. விளிம்பு நிலை மக்கள் அறுதிப் பெரும்பான்மையாக வசிக்கும் இத்தொகுதியில், மழைக்கு ஒதுங்கக்கூட இடமில்லாமல், மக்கள் அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டிருந்த அந்தக் கண நேரத்தில்தான் அச்சம்பவம்  நடந்தது. கொட்டும் மழையில் சாலையோரமிருந்த பெரு மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்தது. அங்கே நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார். சம்பவ இடத்தில், திரண்ட பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளைத் தொலைபேசியில் அழைப்பு விடுத்தனர். எப்போதும் போலவே அழைப்பை ஏற்கவில்லை அதிகாரிகள்.

ஆர்.கே நகரில் சாய்ந்த மரம்

அடுத்து என்ன நடந்தது ? அப்பகுதியைச் சேர்ந்த சர்க்கரை என்பவரே இதுகுறித்து விளக்குகிறார்.

"ஜஸ்ட் மிஸ் சாரே, கொஞ்சமில்லைனா இந்த மரம் மேல விழுந்து, பாட்டி மர்கயா ஆகியிருக்கும். சரி, வேற யாருக்கும் சிக்கலாகிடக்கூடாதுன்னு போன் போட்டா... ஆபீசர்ங்க எடுக்கவேயில்லை. எங்க தொகுதிக்குத்தான் எம்.எல்.ஏ-கூட இல்லையே. கவுன்சிலருமில்ல. அப்புறம்தான் மருது கணேஷுக்கு (ஆர்.கே நகரில் தி.மு.க சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர்) போன் செஞ்சோம். அவரு, அவங்க ஆளுங்களோட அருவா எடுத்துட்டு வந்து, சாஞ்சுக்கிடந்த மரத்தை வெட்டி அந்தப் பக்கமா கெடாசினாரு. அதுக்கப்புறம்தான் அந்தப் பக்கமா நடக்கவே முடிஞ்சது" என்றார். ஆர்.கே நகரில் மழை வரும்போதெல்லாம் இது போன்ற சம்பவங்கள் வாடிக்கை என்றும் தெரிவிக்கின்றனர் அத்தொகுதிவாசிகள்.

நாம் தி.மு.க-வின் ஆர்.கே நகர் பகுதிச் செயலாளர் மருது கணேஷிடம் பேசினோம்.

"ஆர்.கே நகரை பொதுவாக அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்பதற்கு இதுவே ஓர் உதாரணம். பல இடங்களில் இவ்வாறு மரங்கள் விழுந்து மிகப்பெரிய இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரும் பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கியக் காரணம், மெட்ரோ குடிநீருக்காக வெட்டப்பட்ட குழிகள்தான்.  பல இடங்களிலும்  மெட்ரோ குடிநீர் பைப்லைன் போடப்பட்ட பிறகு அதை மூடி, பேட்ச் வொர்க் எதுவும் செய்யப்படவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், அதற்கான நிதி வழங்கப்படவில்லை என்கின்றனர். இந்தக் குழிகளில் மழை நீர் தேங்கி, வருவோர் போவோரை குழியில் தள்ளிவிடுகிறது. இதுமட்டுமல்ல... இதுபோல் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதில் சில மட்டும் சொல்கிறேன்." என்று பட்டியலிட்டார்."ஆர்.கே.நகர் தொகுதியில் முதியோர், விதவை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும்  உதவித் தொகை பல மாதங்களாகவே  வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்தும், வங்கி ஒப்பந்ததாரர்கள் மூலம் வழங்கப்படும் உதவித் தொகையில் உள்ள சீர்கேடுகளை சரிசெய்யக் கோரியும் சுமார் 200 முதியோர்களோடு இம்மாத தொடக்கத்தில், முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் வழக்கம்போல கண்டுகொள்ளவில்லை. போராட்டம் வீரியமடைந்த பின்னே, 'இறுதியாக இம்மாத இறுதிக்குள் பிரச்னையைத் தீர்த்து வைக்கிறேன்' என்றார் மாவட்ட வருவாய் அலுவலர். 

மரத்தை அப்புறப்படுத்தும் மருது கணேஷ்

இதேபோல  39 (அ) வட்ட கடற்கரை பகுதி பழைய N.4. காவல் நிலையம் நுழைவு வாயில் பக்கத்திலேயே   விசைப்படகு  பழுது பார்க்கும் தளத்தில் 08.08.2017 அன்று இரவு ராஜசேகர் என்பவருடைய  விசைப்படகு மற்றும் மூன்று படகுகள் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடித்து  எரிந்தது. இதுபோல இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. தொடர்ந்து ஏற்படும் இதுபோன்ற விபத்துகளை தடுக்க காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்திலேயே தீயணைப்பு நிலையம் ஒன்றை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகளைச் சந்தித்துக் கோரிக்கை வைத்தோம். நடவடிக்கை எடுப்பதாகத்தான் கூறுகிறார்கள். ஆனால், நிவாரணம் கிடைப்பதில்லை. அடுத்து மீண்டும் அதிகாரிகளைத் தொடர்புகொண்டால் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிடுகிறார்கள். மொத்தத்தில் ஆர்.கே நகரில் சின்னச் சின்ன விஷயத்துக்குக்கூட அதிகாரிகளை கூப்பிட வேண்டிய நிலையை வைத்திருப்பதுதான் ஆளும் அரசின் சாதனையாக இருக்கிறது. கூப்பிட்டாலும் கண்டுகொள்ளாமல் போவதே அரசு அதிகாரிகளின் சாதனையாக இருக்கிறது." என்கிறார் நொந்துகொண்டபடி.

சாலைகள் ஓட்டையாகின்றன. மரங்கள் வீழ்கின்றன. 'இலை'-கள் உதிர்கின்றன. இன்னும் விழித்துக் கொள்ளவில்லை அரசு.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement