காவிரி புஷ்கர விழாவுக்கு சிறப்பு அதிகாரி நியமனம்

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில், செப்டம்பர் 12-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை காவிரி மகாபுஷ்கர திருவிழா நடைபெற உள்ளது.  இதற்கென, நாகை மாவட்ட கலால் உதவி ஆணையராக இருந்த வெங்கடேசன், காவிரி புஷ்கர சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  அவரது தலைமையில், மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் புஷ்கர விழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறையினர் கலந்துகொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.  

இந்தக் கூட்டத்தில், அலுவலர்கள் துறை வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்தனர். கூட்டத்தின் முடிவில், விழா நடைபெறும் நாள்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பாதுகாப்புப் பணிக்கு கூடுதலாக போலீஸாரை அமர்த்த வேண்டுமெனவும் மேற்கண்ட நாள்களில் போக்குவரத்து மாற்றம் செய்யவேண்டுமெனவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. விழா நடைபெறும் இடத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மையாகப் பராமரிக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகத்துக்கு எடுத்துரைக்கப்பட்டது. விழா நாள்களில் மின்சாரம் தடையின்றி அளிக்கவும் மின் இணைப்புகளைச் சரியாகப் பராமரிக்கவும் மின்வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.  

அவசரகால சிகிச்சையளிக்க, வாகனங்களுடன் மருத்துவக் குழுவினரை அனுப்பவும், விழா நடைபெறும் இடத்துக்கு அருகே தற்காலிக மருத்துவ மையம் அமைக்கவும் மருத்துவத் துறைக்கு சொல்லப்பட்டது. இதேபோல தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் காவிரி புஷ்கர விழா நாள்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றியும், முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், புஷ்கர விழா கமிட்டியினர் கலந்துகொண்டனர்.       

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!