Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நீர்ப்பாசனங்களை மீட்டெடுக்காவிட்டால் வரலாற்றில் பலவற்றைத் தொலைப்போம்!'' - ஒரு டெல்டா விவசாயியின் குமுறல்

காவிரி

ரைபுரண்டு ஓடிய காவிரி நீரைக்கொண்டு விவசாயம் செய்த ஒரு டெல்டா விவசாயி, இன்று தண்ணீரின்றிக் கிடக்கும் நிலங்களைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார். அவர், தண்ணீரைப் பற்றியும் தஞ்சை மண் பற்றியும் வடிக்கும் குமுறல் இதோ...

''எட்டும் திசையும் புகழும் வண்ணம்  எல்லா வளமும் பெற்று, வந்தாரை வரவேற்று விருந்தளித்து உபசரித்த எங்கள் தமிழகம், இன்று தண்ணீர் இன்றித் தவித்துக்கொண்டிருக்கிறது...  அந்தத் தண்ணீருக்காக அண்டை மாநிலத்தவரிடம்  தினம் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. மூன்று போகமும் விளைந்த எங்கள் விளைநிலங்கள் எல்லாம் விவசாயம் செய்யப்படாததால்,  'விலை' நிலங்களாகிக் கொண்டிருக்கின்றன. ஊர் வாழ கலப்பை ஏந்திய உழைப்பாளிகளின் கைகள், அரசாங்க நிவாரண நிதியை  எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றன. நிலத்தடிநீர் வற்றியதால் குழாயடிப் பக்கம் குருவிகள்கூடப் போவதில்லை. பருவமழை பொய்த்துப்போனதால் கால்நடைகளைக்கூட வளர்க்க வசதியில்லை. ஆற்று நீரிலும் ஊற்று நீரிலும் விவசாயம் செய்து வளம் கொழித்த நிலத்தில், ஆயிரம் அடி போர் போட்டும் தண்ணீருக்கு வழியில்லை.

கிராமங்கள்தான் இப்படியென்றால், நகரங்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. பிள்ளைப்பேரை எதிர்பார்க்கும் கர்ப்பிணிப் பெண்போலத் தண்ணீர் லாரியின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறது  நகர வாழ்க்கை. குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க வேண்டிய அரசோ, ஆட்சியைத் தக்கவைக்க ஆதரவாளர்களிடம் குதிரைப்பேரம் நடத்திக்கொண்டிருக்கிறது. இது, ஒருபுறம் இருக்க.. மறுபுறம், குடிக்கும் நீருக்காகக் கொடுக்கப்படும் விலை குதிரைக்கொம்பாகவே இருக்கிறது. போகும் போக்கைப் பார்த்தால் தண்ணீரின் விலை, தங்கத்தின் விலையைவிடத் தாண்டி நிற்கும் என்றே சொல்லத் தோன்றுகிறது. அப்படி ஒருவேளை நேர்ந்தால், அது காசில்லாதோருக்கு எட்டாக்கனியாக இருக்கும்... காசு இருப்போருக்குப் பற்றாக்குறையாக இருக்கும். 

இப்படித் தண்ணீரின்றித் தத்தளிக்கும் இன்றைய தமிழகத்தின் ஒரு பகுதியாக... 'சோழநாடு சோறுடைத்து', 'சோழநாட்டின் நெற்களஞ்சியம்' என்று போற்றப்பட்ட எங்கள் தஞ்சை மண் ஒரு காலத்தில் எப்படியிருந்தது தெரியுமா?

விவசாயி

தண்ணீரின் முக்கியத்துவம் உணர்ந்துதான் எங்கள் மண்ணின் வளம் கொழிக்க அன்றே கரிகால் சோழன் காவிரிக்காகக் கல்லணையைக் கட்டிச் சென்றான்... நீர்ப்பாசனத்துக்கான வழியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காட்டிச் சென்றான். அதனால்தான் காவிரி பாய்ந்து சென்ற பகுதிகள் எல்லாம் பச்சைப் பசேலென்று காட்சியளித்தன. அந்தப் பசுமைக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் அந்தக் கால இலக்கியங்களும் காவிரி ஓடிய பகுதிகளைப் புகழ்ந்து தள்ளின. அதற்குக் காரணம், இயற்கை எழிலையும், பசுமையையும் கொண்டிருந்தது எங்கள் மண். சில்லென்று வீசும் காற்றுடன் ஆற்றங்கரையோர பள்ளிக்கூடம்... அழகான வீட்டைச் சுற்றி அமைந்த பசுமையான வயல்வெளி... ஆனந்தமாய்க் குதித்து மகிழும் ஆற்றுக் குளியல்... 'ஆட்டம்போட்டது போதும்' என்று சத்தமிடும் பெருசுகள்... அயிரை மீன் குழம்புடனும், அனைத்து வகையான காய்கறிகளுடனும்  தலைவாழை இலை சாப்பாடு என அனைத்தும் எங்கள் பகுதிகளில்  விடுமுறை நாளின்போது களைகட்டும்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் பிறக்கும்போதெல்லாம்... 'மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப் போகிறார்கள்' எனும் செய்தி கேட்டதுமே... அக்கம்பக்கத்து உறவினர்களும், நண்பர்களும் ஒரு கூட்டமாகத் தண்ணீர் வரும் திசையைப் பார்த்து ஆற்றங்கரையில் கூடி நிற்கும் அழகே ஒரு தனி அழகு. அந்த நீரைக் கண்ட கணப்பொழுதில், அங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் எத்தனையோ கனவுகள் , எத்தனையோ எதிர்பார்ப்புகள் அரங்கேறும். தண்ணீர் வந்த சில நாள்களில் எல்லோரும் அக்கரையில் உள்ள வயல்களுக்கு ஆற்றைக் கடந்து மாட்டை ஓட்டிச் சென்று வயலை உழ ஆரம்பித்துவிடுவார்கள். பெரியவர்கள் விவசாய வேலையில் தீவிரமாய் இறங்கிவிட, பிள்ளைப் பருவத்தினரோ  தூண்டில் போட்டு மீன் பிடிப்பார்கள்; துறுதுறுவென தண்ணீரில் துள்ளிக்குதித்து விளையாடுவார்கள். வேலையாள்களுக்கு டீயும், பன்னும் வாங்கிக்கொண்டு செல்லும் தாத்தாக்களுடன் வயல்வெளிக்குப் பயணிக்கும் பேரக்குழந்தைகளும், 'எனக்கும் அதையும் இதையும் வாங்கித் தா' என்று அடம்பிடிப்பார்கள்.

இப்படியான சூழ்நிலையில் விளையும் நெற்பயிர்களும் அவர்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், பருவப்பெண்ணைப்போல் வெட்கமிட்டுத் தலைகவிழ்ந்து நிற்கும். அறுவடைக்குப் பிறகு அனைத்து வீடுகளும் சந்தோஷத்தில் திளைக்கும். ஆனால், அது அனைத்தும் இன்றில்லை. இதுபோல் வாழ்ந்த அனுபவங்கள்கூட இனி மூன்றாம் தலைமுறையினருக்குத் தெரியும்படி இருக்காது. காரணம், தண்ணீரின்றித் தத்தளிக்குது தமிழகம். குடகு மலையிலிருந்து குதித்து, தமிழகத்தின் குறுசிறு பகுதிகளை எல்லாம் கடந்து கடலில் கலக்கும் காவிரி ஆற்றின் பகுதிகளில் எல்லாம் இன்று மணல் மட்டும்தான் மிஞ்சியிருக்கிறது. அந்த மணலும், மாஃபியா கும்பல்களால் சுரண்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது ஒருபுறமிருக்க... மறுபுறம், இயற்கை தரும் மழை நீரைச் சேமிக்க வழியில்லாத வகையில் ஆறு, ஏரி, குளங்கள் எல்லாம் தூர்வாரப்படாமல்  குப்பைக்கூளங்களாகக் காட்சியளிக்கின்றன. மக்களும் நிலத்தடிநீர் ஆதாரத்தைப் பாதிக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர்.

காவிரி

இதுதொடர்பாகச் சமூக ஆர்வலர்கள், 'நமக்கென்று இப்போது இருக்கும் அணைகளும், குளங்களும் நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்த மிகப் பெரிய கொடைகள். ஆனால், நாம் அதையும் தொலைத்துவிட்டு நிற்கிறோம் . இன்று நீராதாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக நாம் இழப்பதன் விளைவாகத் தமிழ்நாடு நிச்சயம் ஒருநாள் பாலைவனமாக மாறும். அதை மாற்ற வேண்டுமென்றால், ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய நம் இளைஞர்கள்  விவசாயத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்க வேண்டும்'  என்று சொல்கிறபோது யாரும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் வேதனை. 

இப்போதே மதகு, கண்மாய் என்றால் என்னவென்று கேட்கும் இன்றைய தலைமுறையைப் பார்க்கும் சூழ்நிலையில், நாளை ஆறு, ஏரி, குளங்களை எல்லாம் வரைபடங்களிலும் , திரை மானிகளிலும் படமிட்டுக் காட்டவேண்டிய நிலை வரலாம். ஆகவே, நீர்ப்பாசனங்களை நாம் இப்போதே மீட்டெடுக்காவிட்டால் வரலாற்றில் பலவற்றைத் தொலைத்ததுபோல் இவற்றையும் தொலைக்க வேண்டிய நிலை உருவாகலாம்''.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement