திருச்சி மாநகரில் தூய்மைப் பணி: கலெக்டர் தொடங்கி வைத்தார் | Trichy Collector started cleaning work in City

வெளியிடப்பட்ட நேரம்: 01:10 (20/08/2017)

கடைசி தொடர்பு:01:10 (20/08/2017)

திருச்சி மாநகரில் தூய்மைப் பணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருச்சி மன்னார்புரத்தில், திருச்சி மாநகராட்சி மற்றும் 'யுகா' பெண்கள் அமைப்பு இணைந்து, தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மாநகர் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியினை மாவட்ட கலெக்டர் ராசாமணி தொடங்கிவைத்தார்.

திருச்சி மாநகரில் தூய்மைப்பணிமாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், முதன்மைப் பொறியாளர் நாகேஷ், செயற்பொறியாளர் அமுதவள்ளி, உதவி ஆணையர் தயாநிதி, திருச்சி சட்டக்கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்ற இந்த தூய்மைப் பணியில், மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட 750 -க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.  மேலும், மாவட்ட கலெக்டர்  முன்னிலையில் அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் டெங்கு தடுப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

அடுத்து,  தூய்மைப் பணியினை தொடங்கி வைத்துப் பேசிய  மாவட்ட கலெக்டர் ராசாமணி,

பொது மக்கள், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்த்து, துணிப்பைகளை உபயோகிக்க முன்வர வேண்டும். மேலும், குப்பைகளில் பிளாஸ்டிக் பைகளைப் போடக்கூடாது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நமது கடமை. மாணவ, மாணவியர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பொதுமக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நாம் நமது வீட்டிலோ, வீட்டின் சுற்றுப்புறத்திலோ டயர், தேங்காய்ச் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள் போன்ற பொருள்களைப் போடக்கூடாது. அவ்வாறு ஏதேனும் வீணான பொருள்கள் கிடந்தாலும், அவற்றை உடனே அகற்றிவிட வேண்டும். வீட்டில் தண்ணீர் சேமித்துவைக்கும் குடங்கள், சிமென்ட் தொட்டிகள், டிரம்கள் ஆகியவற்றை கொசு புகாதவாறு மூடிவைக்க வேண்டும். இதன்மூலம் கொசுக்கள் பரவுவதைத் தடுத்து, நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.