’’மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதி அளித்தது பச்சைத் துரோகம்’’ – நல்லகண்ணு குற்றச்சாட்டு | TN government doing betrayed to their people way of allowing to Karnataka government construct dam in the middle of Cauvery river says Nallakkannu

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (19/08/2017)

கடைசி தொடர்பு:11:20 (21/08/2017)

’’மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதி அளித்தது பச்சைத் துரோகம்’’ – நல்லகண்ணு குற்றச்சாட்டு

'காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடக அரசுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது பச்சைத் துரோகம்’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

nallakannu

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய நல்லகண்ணு, ‘'தமிழகத்தில் மையமான ஆறு காவிரி. பல மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும், விவசாயத் தேவையையும் பூர்த்திசெய்து வருகிறது. இந்த ஆற்றிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டுமென கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி இந்திய அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு செயல்படுத்தவோ, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடவோ இல்லை. இந்த நிலையில், கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற வேண்டுமென்பதற்காக, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டிட கர்நாடக அரசுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது, தமிழக விவசாயிகளுக்கும் மக்களுக்கும் அரசு செய்யும் பச்சைத் துரோகம். 

அ.தி.மு.க-வில் பல சிக்கல்கள் உள்ளன. இன்னும் நான்கு ஆண்டு கால ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளத்தான் இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். மக்கள் பிரச்னைகளுக்காக இந்த அரசு மத்திய அரசை எதிர்த்துப் போராடும் எண்ணம் இல்லை. மத்திய அரசுக்கு எதிராகப் போராடினால், ஆட்சிக்கு பங்கம் வந்துவிடும் என நினைக்கிறது. நீட் தேர்வுக்கு ஓராண்டு மட்டும் விலக்களித்ததைவிட, நிரந்தர விலக்குதான் வேண்டும். காவிரி நீர் மற்றும் நீட் தேர்வு பிரச்னைகளில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் கடுமையாகப் போராடினார். அ.தி.மு.க-வை கருவியாகப் பயன்படுத்தி, பா.ஜ.க தங்களது செல்வாக்கை வளர்க்க முழு முயற்சியில் ஈடுபட்டுவருகிறது’ என்றார்.

இந்நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திருவாரூர் வந்தபோது, ’கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியைத் தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்துவந்துள்ளது. மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. கர்நாடக அரசு அணை கட்டிட தமிழக அரசு சம்மதம் தெரிவித்ததாக வந்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானது’ என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க