வெளியிடப்பட்ட நேரம்: 22:39 (19/08/2017)

கடைசி தொடர்பு:11:17 (21/08/2017)

இளைஞர்களுடன் வாலிபால் விளையாடி அசத்திய வைகோ..!

கரூரில் தங்கியிருக்கும் வைகோ, காலையில் வாக்கிங் செல்லும்போது இளைஞர்களுடன் சேர்ந்து வாலிபால் விளையாடி அசத்தியுள்ளார். இளைஞர்களும் வைகோவுடன் சேர்ந்து குதுகலமாக வாலிபால் விளையாடியுள்ளனர். 

 

 

கரூரில் நடந்த ம.தி.மு.க மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்துக்கு வந்த வைகோவை, கரூரில் தேய்ந்த நிலையில் இருக்கும் கட்சியின் கவலை பாதித்தாலும், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல், மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு வாக்கிங் போன இடத்தில், இளைஞர்களோடு வாலிபால் விளையாடினார். முதல்நாள் போனபோது கிழிந்த நெட், பழைய பந்தை வைத்து இளைஞர்கள் விளையாடியதை பார்த்து மனம் இறங்கிய வைகோ, இன்று வாக்கிங் போனபோது கையோடு ஒரு நெட்டும், வாலிபாலையும் புதிதாக வாங்கிப் போய் அவர்களிடம் கொடுத்து, அவர்களோடு விளையாடி, அவர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

 

கடந்த பதினேழாம் தேதி இரவு கரூருக்கு வந்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ஹேமலதா ஹோட்டலில் தங்கினார். பதினெட்டாம் தேதி காலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகே உள்ள மாவட்ட விளையாட்டரங்கத்துக்கு மாவட்டச் செயலாளர் சிதம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகளோடு வாக்கிங் போனார். அப்போது, மைதானத்தின் ஒரு பக்கம் இளைஞர்கள் சிலர் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் உற்சாகமான வைகோ, அருகே சென்று தன்னையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள கேட்டார். இளைஞர்கள் ஏக சந்தோஷமாகி தலையசைக்க, அங்கே பத்து நிமிடம் விளையாடவும் செய்திருக்கிறார். அப்போது, இளைஞர்கள் விளையாடப் பயன்படுத்திய நெட்டும், பாலும் மோசமான நிலையில் தெரிய, அதை கவனித்தபடி ஹோட்டலுக்கு திரும்பி இருக்கிறார். நேற்று மாலை வெங்கமேடு பகுதியில் நடந்த கட்சியின் மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

ஆனால், அங்கே மாவட்டச் செயலாளர் சிதம்பரம் தொடங்கி இதர நிர்வாகிகள் என அனைவரும், 'தலைவரே, கட்சி நிமைமை சரியில்லை. நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது. கட்சியை பழையபடி பலப்படுத்த ஏதாச்சும் பண்ணுங்க' என்றே பேச, உற்சாகம் குறைந்தே ஹோட்டலுக்கு நேற்று இரவு திரும்பி இருக்கிறார்.  இருந்தாலும், இன்று காலை மறுபடியும் மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு வாக்கிங் போயிருக்கிறார். ஆனால், இவ்வளவு டென்ஷனிலும் மாவட்டச் செயலாளரிடம் சொல்லி, ஒரு புது நெட்டையும், வாலிபாலையும் வாங்கி வரச் சொல்லி, அதை அந்த இளைஞர்களிடம் பரிசளித்தார். கூடவே, அரை மணி நேரம் அவர்களோடு வாலிபால் விளையாடினார்.


 

 

விளையாடி முடித்தப்பின் இளைஞர்களிடம் பேசிய வைகோ, 'நீங்க எங்க வேலை கிடைச்சு போனாலும் உங்களுக்கு டென்ஷன் ஏற்பட்டாலும் இந்த வாலிபால் விளையாடுறதை மட்டும் விட்டுடாதீங்க. மனசுக்கும், உடம்புக்கும் புத்துணர்ச்சி தரக்கூடியது இந்த விளையாட்டு' என்று இளைஞர்களுக்கு அறிவுரை செய்தபடி ஹோட்டலுக்கு கிளம்பினாராம். அரசியல் வெற்றி தோல்விகள்; அலைக்கழிப்புகள் என எல்லாவற்றையும் தாண்டி சிந்தித்துப் பார்த்தால், ஒன்றே ஒன்று தோன்றுகிறது, வைகோ வைகோதான்..!