வறண்ட பூமியில் வாசிப்புக்கான விதை: லைக்ஸ் குவிக்கும் திருவண்ணாமலை புத்தக திருவிழா!

முதன் முறையாக மாபெரும் புத்தகத் திருவிழா திருவண்ணாமலையில் நடக்கிறது.ஆன்மிக தலமான திருவண்ணாமலையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களோ, இலக்கிய ஆளுமைகளோ கடந்த சில ஆண்டு முன்பு வரை கிடையாது. ஆனால் வாசிப்பின் உயிர் நாடி வறண்ட மண்ணில் துடிப்போடுதான் இருந்திருக்கிறது.

நேஷ்னல் புக் டிரஸ்ட் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் இணைந்து மாபெரும் புத்தகத் திருவிழாவை நடத்திக் கொண்டிருக்கிறது .வேலூர் ரோடு, அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள ஈசானி மைதானத்தில் புத்தகத் திருவிழா கடந்த 18-ம் தேதி தொடங்கி  28-ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான முயற்சியை முன்னெடுத்துச் சென்றவர் கலெக்டர் பிரசாத் மு.வடரே. தமிழகத்தின் முன்னணிப் பதிப்பகங்களின் 120 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் அனைத்துப் பள்ளிகளும் புத்தகத்திருவிழாவுக்கு வரவேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி, அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் கண்டிப்பாக ஒரு புத்தகத்தையாவது வாங்கி வாசிப்பை வழக்கப்படுத்திக்கொள்ள  வேண்டும் என சொல்லி இருக்கிறார். அதனால் ஒவ்வொரு ஒன்றியமாக தனியார் பள்ளி வானங்கள் மூலம் மாணவர்கள் புத்தகத் திருவிழாவை பார்வையிட அழைத்து வரப்படுகிறார்கள்.

மாணவர்களின் கையில் வைத்திருக்கும் பத்து, இருபது ரூபாய்க்கு சிறுவர் கதைகள், திருக்குறள் புத்தகங்களை வாங்குகிறார்கள். அதைத் தாண்டி பொருட்காட்சியை காண்பது போன்ற பரவசம் புத்தகத் திருவிழாவில் மாணவர்களின் முகத்தில் காண முடிகிறது. அரசு ஊழியர்கள் புத்தகம் வாங்க 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கடன் உதவி கொடுக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி புத்தகத் திருவிழாவுக்கு வரும் அரசு ஊழியர்கள், இந்தியன் வங்கி, எஸ்.பி.ஐ. வங்கியின் திருவண்ணாமலை கிளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள  ஸ்டாலில் தங்களது ஏடி.எம்.கார்டை ஸ்வைப் செய்தால் பணம் கூடுதலாக ஏறிவிடும். அந்த பணம் ஆறு தவணையாக பிடித்தம் செய்யப்படுமாம். மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக  போட்டிகள், ஆசிரியர்களுக்கு இலக்கிய திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாள் மாலையிலும் தனி மேடையில், பாரதி கிருஷ்ண குமார், இயக்குநர்கள் மிஷ்கின், ராஜூ முருகன், எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பலர் பேச இருக்கிறார்கள். அனுமதியும் இலவசம். அதனால் தினமும் மாலை புத்தகத் திருவிழாவில் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.

இதுகுறித்து திருவண்ணாமலையைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீயிடம் பேசும்போது,''திருவண்ணாமலை வரலாற்றில் இதுதான் பெரிய புத்தகத் திருவிழா. கலெக்டரின் ஆர்வம்தான் இதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. புத்தகத் திருவிழாவுக்கு வருபவர்களின் முகத்தில் சந்தோஷம், பூரிப்பும்  தெரிகிறது. பெரிய திருவிழாவை பார்ப்பது போல் பார்த்துச் செல்கிறார்கள். ஈரோடு, சென்னை என பெரிய புத்தகத்திருவிழாக்களை சென்று பார்த்து வந்த நிலையில், திருவண்ணாமலையில் 120 ஸ்டால்களோடு,10 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களோடு புத்தகத் திருவிழா நடப்பது மாவட்டத்தின் நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது .

வறண்ட பூமியில் வாசிப்புக்கான விதையை இந்த புத்தகத்திருவிழா விதைத்து விட்டது. இந்த புத்தகத் திருவிழா. குறிப்பாக இலக்கிய ஆர்வலர்களுக்கு பெரிய ஊக்கம் கொடுத்துள்ளது. ஆண்டுதோறும் இந்த புத்தகத் திருவிழாவை எதிர்பார்க்கிறோம். அனைவரும் வாசிப்பை நேசிப்பதோடு வழக்கமாக்கி கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!