வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (20/08/2017)

கடைசி தொடர்பு:08:29 (21/08/2017)

கட்சித் தலைமை குறித்து முக்கிய முடிவு: நாளை கூடுகிறது அ.தி.மு.க நிர்வாகிகள் குழு!

அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைவதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையே இரு அணிகளும், மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் வைத்து இணைவதாக தகவல் வெளியானது. ஆனால், பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டதால் இணைப்பு ஏற்படவில்லை. இதனிடையே, இரு அணிகளும் ஒரிரு நாள்களில் இணையும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அமைச்சரவையில் முதலில் ஓ.பி.எஸ் அணிக்கு இரண்டு துறைகள் ஒதுக்கப்பட இருந்த நிலையில், தற்போது மூன்று துறைகள் ஓ.பி.எஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க


மேலும், பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியும், கட்சி வழிகாட்டும் குழு தலைவர் பதவியும் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, கே.பி முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்ட உள்ளதாக அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், இரு அணிகளும் நாளை இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாளை அ.தி.மு.க நிர்வாகிகள் குழு கூட்டம் நடக்கிறது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அப்போது, கட்சித் தலைமை குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, சசிகலா குடும்பத்தினரை கட்சியைவிட்டு நீக்குவது குறித்து, இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதனிடையே, சசிகலாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் அணியினருக்கு கட்சிப் பதவி கொடுத்தால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று டி.டி.வி. தினகரன் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.