'ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைப்பும், 500 கோடி ரூபாய் பேரமும்': தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தகவல்! | Dinakaran faction Mla Vetrivel speaks about Aiadmk merger

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (20/08/2017)

கடைசி தொடர்பு:08:09 (21/08/2017)

'ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைப்பும், 500 கோடி ரூபாய் பேரமும்': தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தகவல்!

அ.தி.மு.க-வின் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அணிகள் விரைவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

வெற்றிவேல்


இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி தினகரன் இல்லத்தில் அவசர ஆலோசனை நடைபெற்றது. இதில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் செந்தில் பாலாஜி, தங்கத்தமிழ் செல்வன், வெற்றிவேல், கென்னடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல், "பன்னீர்செல்வத்துக்கு பேரம் படிந்ததால், இரு கம்பெனிகளின் இணைப்பு சாத்தியமாகியுள்ளது. துபாயில் 500 கோடி ரூபாய் பேரம் வழங்கப்பட்டுள்ளது. இரு அணிகளின் இணைப்புக்கு ஓ.பி.எஸ் ஆதரவாளர்களில் 98 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரை நம்பிச் சென்ற மூத்த நிர்வாகிகளை நடுத்தெருவில் விட்டுச் சென்றுள்ளார். சொந்த கிராம மக்களுக்கு கிணற்றையே வழங்க மனம் இல்லாதவர்தான் பன்னீர்செல்வம். சுயலாபத்துக்காக அணியை இணைக்கிறார் பன்னீர்செல்வம்

தி.மு.க கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பொழுது, எடப்பாடிக்கு எதிராக வாக்களித்து, இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி பல துரோகங்களைச் செய்துள்ளார். ஜெயலலிதா இறப்பில் நீதி விசாரணையை வரவேற்கிறோம். ஆனால், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை இல்லாமல், பணியில் உள்ள மூத்த நீதிபதிகளை வைத்து விசாரிக்க வேண்டும். ஆர். கே. நகரில் நீதி விசாரணை வேண்டாம் என எடப்பாடி கூறினார். ஆனால், தற்போது ஏன் விசாரணை வேண்டும் என முதல்வர் விளக்கமளிக்க வேண்டும். 

ஜெயலலிதாவின் வாரிசு என சசிகலா இளவரசி இருவர் உள்ளனர். வேதா இல்லத்தில் இனி ஆய்வு மேற்கொள்ளச் சென்றால் காவல் துறையில் புகார் அளிக்கப்படும். கட்சி விதிகளை மாற்றி முறைகேடாக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தினகரனை நீக்கினார்கள். இதேபோன்று சசிகலாவையும் நீக்க முடிவு எடுத்துள்ளனர். ஆனால், நாங்கள் செய்வதை பொறுத்திருந்து பாருங்கள்" என்றார்.