'இனி தமிழக வளர்ச்சிதான் குறிக்கோள்': அணிகள் இணைப்பை வாழ்த்திய மோடி! #LiveUpdate | ADMK Merger announcement may be out today: Sources #LiveUpdate

வெளியிடப்பட்ட நேரம்: 09:29 (21/08/2017)

கடைசி தொடர்பு:17:43 (21/08/2017)

'இனி தமிழக வளர்ச்சிதான் குறிக்கோள்': அணிகள் இணைப்பை வாழ்த்திய மோடி! #LiveUpdate

மோடி வாழ்த்து: ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா முடிந்தவுடன், தலைமைச் செயலகம் சென்ற பன்னீர்செல்வம் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று மோடி கூறியுள்ளார்.

அமைச்சரவை கூட்டம்: மாலை 6 மணி அளவில் புதிய அமைச்சரவையின் கூட்டம் நடைபெறுகிறது..

துணை முதல்வரானார் ஓ.பி.எஸ்: தமிழகத்தின் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவருக்கு நிதி மற்றும்  வீட்டு வசதித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

ஆளுநர் மாளிகை: ஜெயலலிதா சமாதியில் மரியாதை செலுத்தியப் பிறகு பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகியோர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளனர். அங்கு பன்னீர்செல்வம் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

ஆளுநர் மாளிகை

மீண்டும் ஜெயலலிதா சமாதி: இரு அணிகள் இணைந்தப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள், மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்றனர். அங்கு ஜெயலலிதா சமாதிக்கு இருவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.மேலும், ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து அவரது படத்துக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல, எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சமாதியிலும் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

ஜெயலலிதா சமாதி

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.  அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சரவையில் பன்னீர்செல்வத்துக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். 

பழனிசாமி - பன்னீர்செல்வம் சந்திப்பு : ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பிரிந்த அணிகள் தற்போது இணைந்தன. எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கைக்குலுக்கினர். அணிகள் இணைந்ததை அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

இணைப்பு உறுதி : புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாம்.
 

அதிமுக தலைமை அலுவலகத்தில் தரையை தொட்டு வணங்கினார் பன்னீர்செல்வம்!

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பிற்பகல் 2.22 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தடைந்தார். அப்போது, கையெடுத்து மேலே கும்பிட்ட பன்னீர்செல்வம், பின்னர் கையை தரையில் வைத்து வணங்கினார். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் உள்ளே சென்றார் பன்னீ்ர்செல்வம்.
 

இன்னும் சற்று நேரத்தில் இணைகிறது பழனிசாமி- பன்னீர்செல்வம் அணி!

பழனிசாமி- பன்னீர்செல்வம் அணியினர் இன்னும் சற்று நேரத்தில் இணையப்போகிறது. அதிமுக தலைமைக் கழகத்தில் முதல்வர் காத்திருக்கும் நிலையில், பன்னீர்செல்வம் தனது அணியின் முக்கிய நிர்வாகிகளுடன் தலைமைக்கழகம் புறப்பட்டுள்ளார்.

*ஓ.பன்னீர்செல்வம் அணி தலைமை அலுவலகம் வந்துவிட்டனர். ஓ.பன்னீர்செல்வத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டுவிட்டதாக ட்வீட் செய்யப்பட்டுள்ளது. எனவே இன்று அணிகள் இணைப்பு உறுதியாக நடக்கும் எனத் தெரிகிறது.

*முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டார். 

admk merger

*ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு தங்கமணி, எஸ்.பி.வேலுமணி , வைத்திலிங்கம் எம்.பி ஆகியோர் வருகை தந்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பன்னீர்செல்வத்துடன் இவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இவர்களின் ஆலோசனைக் கூட்டம் முடிந்தப்பின்னர் அணிகள் இணைப்பு குறித்த இறுதி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. 

*அதிமுக அலுவலகம் செல்வதாக இருந்த எடப்பாடி பழனிசாமியின் திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

திடீர் திருப்பம் : அணிகள் இணைப்பு தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இறுதி நேரத்தில் முக்கிய நிபந்தனை ஒன்றை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்ட பின்னரே, தலைமைக் கழகத்துக்கு வர முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கடைசி நேர நிபந்தனைகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தயக்கம் காட்டுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நினைப்பதால், இந்த நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

admk merger

*இன்னும் சற்று நேரத்தில் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியினர் இணைய உள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்துவிட்டனர். அனைவரின் முகங்களிலும் உற்சாகம். 

admk merger

*ஒ.பன்னீர்செல்வம் அணியினர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டனர். ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திய பின்னர் ஓ.பி.எஸ் அணியினர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்கின்றனர். 

ops house

படம் : தே.அசோக்குமார்

*அணிகள் இணைப்பு உறுதியாகியுள்ள நிலையில் இன்று பிற்பகல் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதா நினைவிடம் சென்று மரியாதை செலுத்தவுள்ளனர். தற்போது சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. 

jayalalithaa

 

 

*ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தங்கள் அணியினருடன்  தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

*முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.  ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

police

படம் : கே.ஜெரோம்
 
 

*இதனிடையே டிடிவி தினகரன் சென்னை அடையாறு இல்லத்தில், தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.  

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அமைச்சர்கள் சென்னை மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடம் சென்று விட்டு, பின்னர் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

* புதிய அமைச்சரவை இன்று மாலை 3 மணிக்கு பதவியேற்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

அமைச்சரவையில் மாற்றம்..? அவசரமாக சென்னை வருகிறார் ஆளுநர் #

அ.தி.மு.க. அணிகள் இணைப்புகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார். 

ஆளுநர் வித்யாசாகர் ராவ்

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்குப் பின்னர், தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்படலாம் என்றும், அவரது அணியைச் சேர்ந்த  இரண்டு பேருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று கூட்டாக வெளியிடுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டால், புதிய அமைச்சரவை இன்றைய தினமே பதவியேற்கும் என்றும் தெரிகிறது. அமைச்சர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைக்கும் விதமாக, மும்பையிலிருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னை திரும்புகிறார். தமிழக ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகிக்கும் மகாராஷ்ட்ரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், தற்போது மும்பையில் இருக்கிறார். மும்பை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக ஆளுநரின் செய்தித்தொடர்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு... இன்று நண்பகலில் அறிவிப்பு?

அ.தி.மு.க. அணிகள் இணைப்புகுறித்த அறிவிப்பு, இன்று நண்பகல் 12 மணிக்கு இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேச இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புக்குப் பின்னர், இரு அணிகள் இணைப்புகுறித்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து அறிவிப்பார்கள் என்று தெரிகிறது. அ.தி.மு.க. சட்டவிதிகள் மாற்றம் குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் கூடி ஆலோசிக்க உள்ளனர். கட்சியில், தினகரன் நியமித்த நிர்வாகிகளின் நியமனங்கள் செல்லாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்துவிட்டார். அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்குப் பின்னர், நிர்வாகிகள் ஒன்றுகூடி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அணிகள் இணைப்புகுறித்து, கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்பட்ட நிலையில், அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால், அணிகள் இணைப்பில் இழுபறி நீடித்துவந்தது. இந்த நிலையில், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அணிகள் இணைப்புகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.