வெளியிடப்பட்ட நேரம்: 10:28 (21/08/2017)

கடைசி தொடர்பு:10:57 (21/08/2017)

சிறைக்கு வெளியே ஷாப்பிங்! - சசிகலாவின் அடுத்த அதிர்ச்சி வீடியோ

பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் வெளியில் சென்று திரும்பியதற்கான புதிய வீடியோ ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது. 

சசிகலா மற்றும் இளவரசி


சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு கூடுதல் வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து கர்நாடக சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு மேற்கொண்டு, அதுகுறித்த ஆய்வறிக்கையை டி.ஜி.பி சத்தியநாராயணாவுக்கு அனுப்பினார். அதில், சசிகலாவுக்கு சிறையில் தனியாக சமையலறை அமைக்கப்பட்டிருப்பதாகவும் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்துதரப்பட்டதாகவும் ரூபா குற்றம் சாட்டியிருந்தார்.

கர்நாடகா மட்டுமல்லாது, தேசிய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக, வினய்குமார் என்ற ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை எழுப்பிய டி.ஜி.பி ரூபா, போக்குவரத்துத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். சசிகலா, சிறையிலிருந்து வெளியில் சென்று திரும்பியதாக ஒரு வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், விசாரணைக் குழு முன்பாக ஆஜரான முன்னாள் டி.ஐ.ஜி ரூபா, சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர், சிறைச்சாலையை விட்டு வெளியே சென்று திரும்பியது போன்ற இரண்டாவது வீடியோவை சமர்ப்பித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், சசிகலா, இளவரசி இருவரும் பைகளுடன் சிறைச்சாலையின் வெளியிலிருந்து நுழைவு வாயில் வழியாகத் திரும்புவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஏற்கெனவே வெளியான வீடியோவில், சசிகலா அணிந்திருந்த அதே உடையுடன் இந்த வீடியோவிலும் அவர் காட்சியளிக்கிறார். மேலும், சசிகலா சிறை வளாகத்துக்குள் நுழைவது போன்ற அந்த வீடியோவில், ஆண் காவலர்கள் இடம்பெற்றுள்ளதும் கேள்விகளை எழுப்பியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது.  
 

 

 

...