வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (21/08/2017)

கடைசி தொடர்பு:12:19 (21/08/2017)

சசிகலாவுக்கு எதிராக 74 ஆதாரங்கள்!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் தொடர்பாக விசாரணைக் குழுவிடம் சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி ரூபா 74 ஆதாரங்களை அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ரூபா - சசிகலா


சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறைத்துறை விதிகளை மீறி சசிகலாவுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டதாக டி.ஐ.ஜி ரூபா குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிரடியாகச் சோதனைகள் மேற்கொண்ட ரூபா, சசிகலாவுக்குத் தனியாகச் சமையலறை, பார்வையாளர்களைச் சந்திக்கத் தனியாக அறை எனப் பல்வேறு வசதிகள் இருந்ததாக, டி.ஜி.பி சத்யநாராயணாவுக்கு எழுதியிருந்தக் கடிதத்தில் ரூபா கூறியிருந்தார். அதற்காக, சிறைத்துறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் ரூபா வெளிப்படையாகப் புகார் கூறினார். இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டி.ஜி.பி சத்யநாராயண ராவ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

டி.ஐ.ஜி ரூபா போக்குவரத்துத் துறைக்கு மாற்றப்பட்டார். சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.பி.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. இந்தக் குழு முன்பாக ஆஜரான ரூபா, சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சிறையிலிருந்து வெளியில் சென்று வந்ததற்கான வீடியோ ஆதாரம் உள்பட 74 ஆதாரங்களை அளித்துள்ளார். மேலும், சிறை நுழைவு வாயிலில் இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் ஆய்வுசெய்ய வேண்டும் என்று விசாரணைக் குழுவிடம் ரூபா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வினய்குமார் தலைமையிலான விசாரணைக் குழுவினர் ஒரு மாதத்தில் விசாரணை அறிக்கையை கர்நாடக அரசிடம் தாக்கல் செய்யவுள்ளனர். இந்த விவகாரத்தில் சசிகலா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.