வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (21/08/2017)

கடைசி தொடர்பு:14:40 (21/08/2017)

எல்லா சடங்குகளிலும் ஓர் எளிய மருத்துவம்

நமது எல்லா நம்பிக்கைகளின் அடித்தளத்திலும் ஒரு மகத்தான அறிவியல் ஒளிந்துகொண்டுதான் உள்ளது. 'இதைச் செய் நல்லது' என்று சொன்னால் கேட்க மாட்டார்கள் என்பதால்தான், எல்லா அறிவியல் விஷயங்களுக்கும் ஆன்மிக முடிச்சுப்போட்டு வைத்தார்கள் நம் பெரியவர்கள். எளிய மருத்துவம் ஒன்று எல்லா சடங்குகளிலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படி சில விஷயங்களை இங்கு பார்ப்போம்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்புகூட பெண்கள் விறகு அடுப்பில் சமைத்துவந்தார்கள். சவுக்கு மரமோ, முள் மரங்களோதான் பெரும்பாலும் விறகாக இருக்கும். அதை வைத்துச் சமைக்கும்போது எழும் புகை, கட்டாயம் அருகில் இருக்கும் பெண்களுக்கு காசநோயை உருவாக்கும். இந்தப் பாதிப்பிலிருந்து பெண்களைக் காக்க ஒரே வழி, துளசிதான். துளசியை முகரும்போதோ, உண்ணும்போதோ காசநோய் உண்டாகும் வாய்ப்பே இல்லை என்று நமது பாரம்பர்ய வைத்தியம் கூறுகிறது. தினமும் துளசியை சாப்பிடுங்கள் என்று சொன்னால், பெண்கள் அத்தனை அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு நேரமும் இருக்காது. எனவேதான், வீட்டில் துளசி வளர்ப்பது லட்சுமி கடாட்சம். துளசியைச் சுற்றிவந்து வணங்கி, நாலு இலைகளைப் பிரசாதமாக உண்பது குடும்பத்துக்கு நல்லது, குறிப்பாக கணவர் நீண்ட ஆயுளோடு இருப்பார். பெண்களும் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள் என்று சொல்லப்பட்டது. கொஞ்சக் காலம் முன்பு வரை பெண்களும் அதைத் தவறாமல் கடைபிடித்தார்கள். 

உண்ணா நோன்பு

கடவுளுக்கு செய்யப்படும் பூசைகூட ஒருவகையில் நமது உடலுக்கு செய்துகொள்ளும் மருத்துவ சிகிச்சைதான். பூவினால் மட்டுமே செய்யப்பட்டு வந்த செயல் என்பதால், பூ செய்  என்பது மருவி, பூசை என்றானது. பிறகு, மருத்துவ குணம் வாய்ந்த பல பொருள்களைக் கொண்டும் பூசை செய்யும் முறை உண்டானது. கற்பூரம், குங்கிலியம், நறுமணப் பூக்கள், துளசி, வில்வம், அருகம்புல், பழங்கள், ஊதுவத்தி, தேங்காய், சாம்பிராணி போன்ற தூய மருத்துவப் பொருள்கள் இணைந்த பூசை, மருத்துவ சிகிச்சையாகவே பின்னர் மாறிப்போனது. தூய கற்பூரத்தின் புகை கண்களுக்கு நல்லது. கண்பார்வைக்கு பலம் கூட்டும் ஆற்றல்கொண்டது. அதனால்தான், கற்பூர ஆரத்தியைக் கண்ணில் ஒற்றிக்கொள்கிறோம். துளசி, பச்சைக் கற்பூரக் கரைசல் தீர்த்தம் என்பது  நல்ல எனர்ஜி டானிக். தேங்காய் வாய்ப்புண், வயிற்றுப் புண்ணுக்கு மருந்து. சாம்பிராணி நீர்கோர்ப்பு, தலைவலிக்கு அற்புத மருந்து. மலர்கள் சூடிக்கொள்வது மனதுக்கு மட்டுமல்ல உடலுக்கு உற்சாகமும் அளிப்பது. வில்வம், அருகம்புல் நச்சை நீக்கக்கூடியது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் பூசையின் மகிமையை. உண்மையில், ஆண்டவனுக்கு செய்யும் நன்றிக்கடன் மட்டுமல்ல... ஒரு எளிய மருத்துவமாகவும் பூசை வழிபாடுகள் இருந்துவருகின்றன. 

எளிய மருத்துவம்

உண்ணா நோன்புகூட ஒரு எளிய மருத்துவம்தான் என்பதை அறிந்துவைத்திருப்பீர்கள். மனிதனைத் தவிர எல்லா விலங்கினமும் பசியை ஒரு ஆயுதமாக வைத்து, நோய்களை வென்று தனது ஆயுளை நீட்டித்துக்கொள்கிறது. பசியைப் பொறுக்கவே முடியாத மனிதன்தான் தோற்றுப்போய் நோய்களைப் பெற்றுக்கொள்கிறான். மனிதன், தேவைப்படும்போதெல்லாம் உண்கிறான். விலங்குகள் கிடைக்கும்போது உண்கின்றன. அதனாலேயே அவைகளுக்கு நோய்கள் குறைவு. சீரான காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும் உண்ணாநோன்புகூட உடலுக்கு மருத்துவரீதியாக பயனளிக்கும். இப்படித்தான் மாவிலை கட்டுவது, மஞ்சள் தெளிப்பது, விளக்கு ஏற்றுவது என எல்லா சடங்குகளிலும் ஒரு எளிய மருத்துவத்தை நமது முன்னோர்கள் ஒளித்துவைத்துள்ளார்கள். ஆக, எதையும் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் விமர்சிக்க வேண்டாமே...