பரபரப்புக்கிடையே சென்னை வந்தடைந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

அ.தி.மு.க.வில் அணிகள் இணைப்பு நடக்கவுள்ள பரபரப்புக்கிடையே தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மும்பையிலிருந்து சென்னை வந்தடைந்தார். 

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்


அ.தி.மு.க. அணிகள் இணைப்பு மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் எழுந்துள்ள நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ளார். மகாராஷ்ட்ரா மாநில ஆளுநராகப் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ், தமிழக அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு, மும்பை நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்துசெய்துவிட்டு சென்னை வந்தார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து சசிகலாவை நீக்கி அறிவிப்பு வெளியிட்ட பின்னரே, தலைமைக் கழகத்துக்கு வந்து இணைப்புகுறித்துப் பேச முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனையால், அணிகள் இணைப்பில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஆலோசித்துவருகிறார். ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்களுடன்  கிரீன்வேஸ் இல்லத்தில் காலை முதலே ஆலோசனை நடத்திவருகிறார். அதேபோல, டி.டி.வி. தினகரனும் தனது ஆதரவாளர்களுடன் அடையாறு இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சசிகலா கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், செய்யவேண்டிய அடுத்தகட்ட நகர்வுகள்குறித்து சட்ட நிபுணர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ளார். அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  மாலை 3 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியானது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!