உயர்நீதிமன்ற நோட்டீஸை வாங்க மறுத்த சட்டபேரவைத் தலைவர் தனபால்!

விருதுநகரைச் சேர்ந்த அ.தி.மு.க உறுப்பினர் ஆணழகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "சசிகலா  சிறையில் இருக்கும் நிலையில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி அன்று அ.தி.மு.க-வின் செய்தி தொடர்பாளர் கௌரி சங்கர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவுடைய ஆலோசனை மற்றும் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு வழிநடத்தப்படும் எனக் கூறியிருந்தார்.


 

இதற்கு எந்த அமைச்சரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, பிப்ரவரி 28-ம் தேதி அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கௌரிசங்கரின்  பேச்சை உறுதிப்படுத்தும் வகையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் சிறையில் சென்று சசிகலாவைப் பார்த்ததாகவும், அரசின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் பேசியதாகவும் கூறியிருந்தனர், இந்தச் செயல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 188 வது சரத்துக்கும் அமைச்சராகப் பொறுப்பு ஏற்கும்போது எடுத்த ரகசிய காப்பு உறுதி மொழிக்கும் எதிரானது. இந்தச் செயல்களுக்கு முதலமைச்சரும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

முதல்வர் மற்றும் அமைச்சர்களின் செயலானது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளது. சசிகலா உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டஒரு குற்றவாளி ஆவார். எனவே, இது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ பதவிகளைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சபாநாயகருக்கும் சட்டப்பேரவை செயலருக்கும் கடந்த 13,16-ம் தேதிகளில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே நீதிமன்றம் தலையிட்டு நான் அளித்த மனுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் வகையில் மனுவை கவர்னருக்கு அனுப்பி வைக்க சபாநாயகருக்கும் சட்டப்பேரவை செயலருக்கும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில், நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் சட்டப்பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸை வாங்க மறுத்ததால் அவரை இந்த வழக்கின் எதிர் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டும் வழக்கின் விசாரணையை செப்பம்பர் 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!