' சசிகலா என்ன வார்டு செயலாளரா?' - தகிக்கும் திவாகரன் ஆதரவாளர்கள்

தினகரன்

' அ.தி.மு.க-வில் இருந்து சசிகலாவை நீக்கினால், அவர்கள் ஆதரவு மாவட்டச் செயலாளர்களை நான் நீக்குவேன்' எனக் கொதித்துக் கொண்டிருக்கிறார் தினகரன் என்கின்றனர் மன்னார்குடி அ.தி.மு.க-வினர். 

அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குள் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் செல்லும் தகவலைக் கேள்விப்பட்டதில், மன்னார்குடியில் சசிகலா உறவுகள் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர். கட்சிப் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பன்னீர்செல்வம் தரப்பினர் முன்வைத்துள்ளதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர். 'கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ஒன்று சேர்ந்துதான், பொதுச் செயலாளர் பதவிக்கு சின்னம்மாவை முன்னிறுத்தினர். தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அஃபிடவிட்டிலும் அவர் பெயரைத்தான் முன்மொழிந்துள்ளனர். தற்போது கட்சியிலிருந்து அவரை நீக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். நினைத்த மாத்திரத்தில் கட்சியைவிட்டு நீக்க, அது என்ன வார்டு செயலாளர் பதவியா? மத்திய அரசு நினைப்பதை எடப்பாடி பழனிசாமி நடத்திக் காட்டுகிறார். அதில் பன்னீர்செல்வம் குளிர்காய்கிறார்' என அ.தி.மு.க நிர்வாகிகளிடம் கொதிப்பைக் காட்டியிருக்கிறது சசிகலா குடும்பம். 

இணைப்பு நடவடிக்கை நடந்த பிறகு, டெல்டா மாவட்டத்துக்குப் புதிய நிர்வாகிகளை திவாகரன் தேர்வுசெய்து வைத்திருக்கிறார். தஞ்சை மாவட்டத்தையே தெற்கு, வடக்கு, மாநகரம் என மூன்றாகப் பிரித்து வைத்துள்ளார். தற்போது அ.தி.மு.க-வின் தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் வைத்திலிங்கத்துக்குப் பதிலாக, மாவட்ட அம்மா பேரவைச் செயலாளராக இருக்கும் மா.சேகர், மாநகர மாவட்டச் செயலாளராக தஞ்சை தொகுதி எம்எல்ஏ ரெங்கசாமி, வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் ஒன்றியச் செயலாளர் பொன்.த.மனோகரன் ஆகியோர் திவாகரனின் ஹிட் லிஸ்டில் இருக்கிறார்கள். இனி வரும் நாள்களில் நிர்வாகிகள் மாற்றத்தை தினகரனும் திவாகரனும் கூட்டாக இணைந்து அறிவிப்பார்கள்' என்கின்றனர் மன்னார்குடி அ.தி.மு.க-வினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!