வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (21/08/2017)

கடைசி தொடர்பு:16:40 (21/08/2017)

கலெக்டரிடம் விசித்திர கோரிக்கை வைத்த குடிமன்னர்கள்!

டாஸ்மாக்

வாரம்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்று வருகின்றன. இதில் தங்கள் பிரச்னைகளை மனுக்களாக எழுதி, கலெக்டரிடம் மக்கள் நேரடியாகக் கொடுப்பார்கள். சமீபகாலமாக குடிநீர் பிரச்னை, டாஸ்மாக் கடையைக் காலி செய்யுங்கள் என்பதுப் போன்ற கோரிக்கைகள்தான் அதிகமாக வருகின்றன. இன்றைக்கும் வழக்கம்போல்  குறைதீர்க்கும் கூட்டத்துக்குத் தயாராக இருந்தது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம். வழக்கம் போலவே, டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு, ஒட்டன்சத்திரம் ஒன்றாவது வார்டு பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்தார்கள். சங்குப்பிள்ளைபுதூர் கொல்லபட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையால் இடையூறு ஏற்படுவதாகவும், அதனால் அந்தக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் மனு அளித்தனர். அவர்கள் மனு அளித்த சற்றுநேரத்தில், 'எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கையோடு வந்தனர் கொடைக்கானல் பெருமாள்மலையைச் சேர்ந்த குடிமகன்கள் சிலர். ஒரே நேரத்தில் மதுக்கடை வேண்டாம் என சிலரும், மதுக்கடை வேண்டும் என சிலரும் மனுக்கள் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

கலெக்டரிடம் மனுகொடுத்து விட்டு வெளியே வந்த குடிமகன்களிடம் பேசினோம். ''நாங்க பெருமாள்மலை பக்கத்துல இருக்கோம். ஏற்கெனவே பெருமாள்மலையில இருந்த கடையை அடைச்சிட்டாங்க. அதுக்குப் பின்னாடி நாங்க கொடைக்கானல் போயி சரக்கு வாங்கி குடிச்சிட்டு இருந்தோம். கொஞ்சநாளைக்கு முன்னாடி, பெருமாள்மலையில ஒரு கடையை ஓப்பன் பண்ணுனாங்க. அதுனால, அங்கப்போயி சந்தோஷமா சரக்கு அடிச்சுட்டு இருந்தோம். மக்கள் சொல்றாங்கன்னு அந்தக் கடையையும் மூடிட்டாங்க. இங்க கடையிருக்க வரைக்கும் தினமும் நூறு ரூபாய்தான் செலவாகும். ஆனா, இப்ப, இங்க கடையில்லாததால, கொடைக்கானல் போய் சரக்கு அடிக்க வேண்டியிருக்கு. அப்படிப் போறப்ப பஸ்சுக்கு இருபது ரூபாய் போயிடுது. சைட் டிஸ்சுக்கு முப்பது ரூபாய் செலவாகுது. ஆக, நூத்தம்பது ரூபாய் இருந்தாத்தான் குவாட்டர் அடிக்க முடியுது. எங்கள மாதிரி ஏழைங்க, வசதி வாய்ப்பில்லாதவங்களுக்கு இது ரொம்ப கஷ்டமாயிருக்கு. திரும்பவும் பெருமாள்மலையிலேயே கடையைத் திறந்துட்டா, 150 ரூபாயோட இன்னொரு 50 ரூபாய் சேர்த்துப் போட்டு, ரெண்டு குவாட்டரா அடிச்சுட்டு பேசாம வீட்டுல படுத்துக்கிடப்போம்ல. அதுனால, உடனடியா எங்களுக்குக் கடையை வெச்சுக்கொடுங்க.. இல்லன்னா போராட்டம் பெருசாகிடும்‘‘என அதிரடியாகப் பேசியபடியே நடையைக் கட்டினர்.

‘குடி’ மகன்களின் கோரிக்கை, மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்களிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. பலர் அவர்களை வாய்க்குள் முணுமுணுத்தபடி திட்டித் தீர்த்தாலும், அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் தங்கள் கோரிக்கை மனுவைக் கொடுத்த திருப்தியில் கிளம்பினார்கள்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க