வெளியிடப்பட்ட நேரம்: 15:27 (21/08/2017)

கடைசி தொடர்பு:15:30 (21/08/2017)

“தி.மு.க - அ.தி.மு.க-வை வீழ்த்தவே ரஜினிக்கு ஆதரவு!” - தமிழருவி மணியன் ஒப்புதல்

“ரஜினி, அரசியலுக்குள் வருவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது” என்று திருச்சியில் 'போர் முரசு' கொட்டியிருக்கிறார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்! 

நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்தார் தமிழருவி மணியன். அன்றைய தினத்திலிருந்தே தமிழக அரசியல் அரங்கில், தமிழருவி மணியனுக்கு எதிரான முணுமுணுப்புகளும் ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில், ‘ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் அவசியமா?’ என்ற தலைப்பில் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் தமிழருவி மணியனிடம் பேசினோம்...

தமிழருவி மணியன்

“ரஜினிகாந்த், பி.ஜே.பி-க்குப் பின்னால் போகமாட்டார் என்று எந்த நம்பிக்கையில் உறுதி கொடுக்கிறீர்கள்?”

“ரஜினி, பி.ஜே.பி-யோடு போகமாட்டார் என்று நான் சொல்லவில்லை. பி.ஜே.பி தலைமையில் ரஜினி இருக்கமாட்டார் என்றுதான் சொல்கிறேன். அவர் ஆரம்பிக்கவிருக்கிற கட்சியோடு கூட்டணியில் வேண்டுமானால், பி.ஜே.பி இருக்கலாம். இந்தக் கருத்தையும்கூட அவர் என்னிடம் பேசுகிற பேச்சை வைத்தும் எனக்குக் கிடைக்கிற தகவல்களின் அடிப்படையிலும்தான் கூறுகிறேன்.”

“ரஜினி, ஓர் ஆன்மிகவாதி. பி.ஜே.பி தலைவர்கள் தொடர்ச்சியாக அவரை சந்தித்துப் பேசுகின்றனர். ஆகவே, இதுகுறித்த செய்திகளின் நம்பகத்தன்மை அதிகரிக்கிறதே?”

“தமிழ்ப் பண்பாட்டைத் தலை மீது தூக்கிவைத்துக் காப்பதற்காகவே களம் கண்டிருக்கிற 'நாம் தமிழர்' நண்பர்கள்கூட, என்னைப்பற்றி வலைதளங்களில் எழுதுகிறபோது, 'ரஜினிகாந்திடம் 10 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு இந்த மாநாட்டை நடத்தியிருக்கிறார் தமிழருவி மணியன்' என்றெல்லாம் எழுதுகிறார்கள். அதுவெல்லாம் உண்மையாகிவிடுமா?

தமிழருவி மணியன்

அவரவர் அரிப்புக்கும், தினவுக்கும் எதையாவது சொல்லி, எவனையாவது கேவலப்படுத்த வேண்டும் என்பதுதான் தமிழினப் பண்பாட்டுக் காவலர்களின் நடைமுறையாகிவிட்டது. ஆனால், அதைக்கூட அவர்களால் நல்ல தமிழில் எழுதமுடியவில்லையே... வல்லின 'ற' எங்கே வரும், இடையின 'ர' எங்கே வரும் என்பதைக்கூடத் தெரியாதவன்தான் தமிழைக் காப்பாற்றப் போகிறான். 'நாயே, பேயே' என்றெல்லாம் மிகக் கேவலமாக, தரக்குறைவாக எழுதுகிறவன்தான் தமிழர் பண்பாட்டைக் காப்பாற்றுவதற்கு 'நாம் தமிழர்' பின்னால் இருக்கிறான். இதெல்லாம் உண்மையாகிவிடுமா?

நான் சொல்ல வருவதெல்லாம் ரஜினி, அனைவருக்குமானவர். அந்த இமேஜைக் கெடுத்துக்கொள்ள அவர் விரும்பமாட்டார். எனவே, மத்திய அரசைப் பகைத்துக்கொண்டு, அவரது கனவுத் திட்டமான தென்னக நதிகளை இணைப்பதெல்லாம் சாத்தியமே கிடையாது.”

“அப்படியென்றால், ரஜினிகாந்துக்கு நீங்கள் ஆதரவளிப்பதன் நோக்கம்?”

“எடப்பாடி பழனிசாமி மாதிரி மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடப்பவர்களால் தமிழகத்துக்கு என்ன நன்மை வந்துவிடப்போகிறது? காமராஜர், ஜெயலலிதா போன்ற வசீகர - வலிமைமிக்கத் தலைவர்கள் மாநில உரிமைகளை, மத்திய அரசிடம் துணிச்சலாகப் பேசிப் பெற்றுக்கொடுத்தார்கள். அதே நேரம், மாநில உரிமைக்காக மத்திய அரசோடு உரசிக்கொண்டு சண்டை போட்டுக்கொள்வதும் தேவையில்லை. உரிமையைக் கேட்டு வாங்குவதற்கான வசீகரத் தலைமை ரஜினிகாந்திடம் இருக்கிறது. அதனால், தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் வரவேற்கிறேன். மற்றபடி வகுப்புவாதத்துக்காகவோ, இந்துத்துவாவைத் தூக்கிப் பிடிப்பதற்காகவோ ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை. ஒருவேளை அப்படியிருந்தால், இந்த தமிழருவி மணியன் அவர் பின்னாடி போய் நிற்கமாட்டான்!”

ரஜினிகாந்த்

“தமிழக மூத்த அரசியல்வாதிகளால் இதுவரையிலும் சாதிக்கமுடியாத, ‘தமிழக நலன்’ சார்ந்த திட்டங்களை எல்லாம் ரஜினிகாந்த் சாதிப்பார் என்று நம்புகிறீர்களா?”

“நம்பிக்கைதான் வாழ்க்கை! ஒருவர் சாதிக்கவில்லை என்பதற்காக இன்னொருவரும் சாதிக்கமாட்டார் என்று சொன்னால், இதுவரை உலகத்தில் எந்தவொரு சாதனையும் நிகழ்ந்திருக்காது. எனவே, ஒருவர் விட்ட இடத்திலிருந்து இன்னொருவர் தொடர்வதுதான் முயற்சி. மாறாக, ஒருவர் செய்யமுடியவில்லை; அதனால் அடுத்தவரும் செய்யமுடியாது என்றிருந்தால், அதுதான் மனதளவில் வீழ்ச்சி. அதனால் இதுஒன்றும் பிரச்னையில்லை!

என்னைப் பொருத்தளவில், ஊழல் மிகுந்த தி.மு.க - அ.தி.மு.க என இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும் வீழ்த்த வேண்டும். அதற்கு வாய்ப்பாக ரஜினிகாந்தை நான் பயன்படுத்திக்கொள்கிறேன்... அவ்வளவுதான்!.”


டிரெண்டிங் @ விகடன்