வெளியிடப்பட்ட நேரம்: 16:14 (21/08/2017)

கடைசி தொடர்பு:16:48 (21/08/2017)

ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பொறுப்பு வழங்கி சூளுரைத்த முதல்வர் பழனிசாமி!

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும் துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமியையும் நியமித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இரட்டை இலைச் சின்னத்தை மீட்போம்; எதிரிகளை வீழ்த்துவோம் என்றும் சூளுரைத்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
11 எம்.எல்.ஏ-க்கள், 12 எம்.பி-க்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி அணி ஈடுபட்டு வந்தது. 6 மாதத்துக்குப் பிறகு, இரண்டு அணிகளும் இன்று இணைந்தன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இணைப்பு விழா நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, "இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. அந்தக் கட்சிகள் பிரிந்துள்ளன. ஆனால், இணைந்த வரலாறு கிடையாது. அ.தி.மு.க ஒன்றுதான் இணைந்துள்ளது. மக்களோடு மக்களாக இருந்து சில கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் அதையெல்லாம் ஒன்றுகூடி பேசி கலைந்து ஒற்றுமை ஏற்படுத்தி மீண்டும் இந்த இயக்கம் எழுச்சிபெரும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிற கட்சி அ.தி.மு.க. அதன் அடிப்படையில் இன்று இணைந்திருக்கிறோம். இந்த நிகழ்ச்சி வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி.

இப்படி இருக்குமா அப்படியிருக்குமா பின்னாடி புகுந்துவிடலாமா என்று கனவு கண்டவர்களுக்கு இன்று சம்மட்டியடி கொடுத்திருக்கிறோம். எத்தகைய சூழ்நிலை வந்தாலும் எவ்வளவு கருத்துவேறுபாடு வந்தாலும் அதையெல்லாம் பேசித் தீர்த்து மனநிறைவு பெற்று அந்த இருபெரும் தலைவர்களுடைய லட்சியங்களை நிறைவேற்றுவதே எங்கள் லட்சியம் என்று கருதி இந்த இணைப்பு இன்று நடைபெற்றிருக்கிறது. இந்த இணைப்பில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்று முதல் எத்தகைய சூழ்நிலையிலும்  எந்தவொரு கருத்து வேறுபாடு இல்லாமல் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆகியோரின் நினைவாக இனி துளியும் கருத்துவேறுபாடு இல்லாமல் சிறப்பாகப் பணியாற்றி கட்சிக்கும் ஆட்சிக்கும் பெருமை சேர்ப்போம் என்று அனைவரும் உறுதி ஏற்போம். தொண்டர்கள், நிர்வாகிகள் ஆதரவோடு சில முடிவுகளை எடுத்திருக்கிறோம். தலைமைக்கழகம் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து முடிவெடுத்திருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் இந்த இயக்கத்துக்கு ஒருங்கிணைப்பாளராகவும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக நானும் நியமிக்கப்பட்டுள்ளோம்.

அதேபோல் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமியும் வைத்திலிங்கமும் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களின் அரவணைப்போடு பணியாற்ற வேண்டும். மேலும் கட்சிக்கு வலுசேர்க்கும் விதமாக வழிகாட்டு குழு ஒன்று அமைக்கப்படும். அந்தக் குழுவில் 11 பேர் இடம்பெறுவார்கள். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இரட்டை இலைச் சின்னத்தை மீட்போம். எதிரிகளை வீழ்த்துவோம். இனிமேல் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா கனவுகளையும் நிறைவேற்றுவோம். சட்டமன்றத்தில் பேசிய ஜெயலலிதா, எனக்குப் பின்னாலும் நூறாண்டு காலம் அ.தி.மு.க ஆட்சியிலிருக்க வேண்டும் என்று சூளுரை ஏற்றார். ஜெயலலிதாவின் லட்சிய வார்த்தையை நாம் நிறைவேற்றுவோம்  என்று சொல்லிவிடைபெறுகிறேன்" என்று பேசினார்.