தூத்துக்குடியில் நிலத்தடி நீர் திருட்டை தடுக்கக்கோரி ஆட்சியர் அறை முற்றுகை | Thoothukudi people holds protest against groundwater loot

வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (21/08/2017)

கடைசி தொடர்பு:17:35 (21/08/2017)

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் திருட்டை தடுக்கக்கோரி ஆட்சியர் அறை முற்றுகை

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் நிலத்தடி நீர் திருட்டை தடுத்து நிறுத்தக்கோரி நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தினர் 50க்கும் மேற்பட்டவர்கள் போலீஸாரின் தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அறையை முற்றுகையிடச் சென்றபோது கைது செய்யப்பட்டனர்.

நிலத்தடி நீர் திருட்டை தடுக்ககோரி ஆட்சியர் அலுவலக முற்றுகை

மாவட்டத்தில் நடந்து வரும் நிலத்தடி நீர் திருட்டை தடுத்துநிறுத்தாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 13-ம் தேதி புதுக்கோட்டை யூனியன் அலுவலகம் முன்பு நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதோடு 11 தண்ணீர் லாரிகளையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து  இன்று போலீஸாரின் தடையை மீறி கோஷம் எழுப்பியபடியே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்று ஆட்சியர் அறையை  முற்றுகையிட முயன்றதால் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட கடும்வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

கைது செய்து அழைத்துவரப்படும் போராட்டக்காரர்கள்

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறுகையில், ‘’ தமிழகம் முழுவதுமே போன வருசம் பருவமழை பொய்த்துப் போனதுனால கடும் வறட்சி நிலவி வருது. குடி தண்ணீருக்கே தட்டுப்பாடா இருக்கு. தண்ணீர் பிரச்னையினால அந்தந்தப்பகுதி மக்கள் கையில குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டு வர்றாங்க. ஒரு குடம் தண்ணீரை 10 ரூபா விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை.  இந்த நிலைமையில மாவட்ட ஆட்சியரோட தடை உத்தரவையும் மீறி தூத்துக்குடி மற்றும் ஆறுமுகநேரி பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட், ஸ்பிக், தாரங்கதாரா கெமிக்கல் ஆலை ஆகிய தனியார்ஆலைகள் அவர்களுக்குத் தேவையான தண்ணீரை விலை கொடுத்து வாங்கிட்டு வர்றாங்க. 

கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள்

இந்தத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான தண்ணீரை தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய தாலுகாக்களில் 40 விவசாய கிராமங்களில் தனியார் மூலமாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தினமும் 8கோடி லிட்டர் தண்ணீரை லாரிகளில் கொண்டு செல்கிறார்கள்.  ஏற்கெனவே தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீர் சராசரியாக 100 அடிக்கு கீழே போய்விட்டது. கடந்த ஒருவருசத்துல மட்டும் கூடுதலா 15 அடி ஆழம் தண்ணீர் கீழே போய்விட்டது. இந்த நிலத்தடி நீர் கொள்ளையைத் தடுத்து நிறுத்தாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தியிருக்கோம். இன்னும் இதே நிலை நீடித்தால் அனைத்து விவசாயிகள், பொதுமக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்’’ என்றார்.  முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க