வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (21/08/2017)

கடைசி தொடர்பு:19:05 (21/08/2017)

பராமரிப்புப் பணிக்குப் பிறகு, மீண்டும் தயாரானது விவேகானந்தா படகு!

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் பாறையில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையைச்  சுற்றுலா பயணிகள் பார்க்கும் விதமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா என்று  மூன்று சுற்றுலா படகுகள்  இயக்கப்பட்டு வருகின்றன.


 

தற்போது திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், திருவள்ளுவர் சிலைக்குப் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் சுற்றுலா படகில் சென்று பார்த்து வர முடியும்.2013-ம் ஆண்டு சுற்றுலா பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட விவேகானந்தா சுற்றுலா படகுக்கு 2015 ம் ஆண்டு பராமரிப்பு பணி நடைபெற்றது. அதன் பின்பு, 2017-ம் ஆண்டுக்கான பராமரிப்பு பணி தொடங்கியது. அதற்காக தமிழக அரசு சார்பில் 17.6 லட்சம் ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள்  செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதற்காக, கன்னியாகுமரி சின்னமுட்டம் படகு பராமரிப்பு தளத்துக்கு கொண்டுவந்து, விவேகானந்தா படகு கரையேற்றப்பட்டு, படகில் இருக்கைகள், வர்ணம் பூசுதல் போன்ற பணிகளுடன் இயந்திர பராமரிப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. மேலும் பராமரிப்பு பணிகள் முடிந்து வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி மீண்டும் விவேகானந்தா படகு திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல இயக்கப்படும் எனவும் அதுவரை குகன் மற்றும் பொதிகை சுற்றுலா படகுகள் பயணிகளை ஏற்றி செல்லும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்து இருந்தது.

தற்போது சற்று காலதாமதமாகப் படகு பராமரிப்புப் பணிகள் முடிவடைந்துள்ளது. சொகுசு இருக்கைகள், நவீன வசதிகளுடன் விவேகானந்தா படகு புதுப் பொலிவு பெற்றுள்ளது. நாளை காலை சின்ன முட்டத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வெள்ளோட்டமாகப் படகு கொண்டு வரப்படுகிறது. நாளை மறுநாள் 23-ம் தேதி முதல் விவேகானந்தா படகு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்குறது. படகில் பயணம் செய்ய சாதாரண கட்டணமாக 34 ரூபாயும், சிறப்பு கட்டணமாக169 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெறுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க