வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (21/08/2017)

கடைசி தொடர்பு:19:35 (21/08/2017)

ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்த பெண்! -நெல்லையில் பரபரப்பு

விஷம் அருந்த முயற்சி

வருமானச் சான்று வழங்கியதில் தொடர்ந்து பாரபட்சமாக செயல்படும் வருவாய்த் துறை அதிகாரிகளைக் கண்டித்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் ஒருவர் விஷம் அருந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம், மானூர் அருகே உள்ள சுப்பையாபுரத்தைச் சேர்ந்தவர் பிரேமா. இவரது கணவர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து கூலி வேலை செய்து தனது இரு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் தமிழக அரசின் சத்துணவுப் பணியாளர் பணிக்காக கடந்த ஆண்டு விண்ணப்பம் செய்தார். அதில் வருமானச் சான்று கோரப்பட்டு இருந்ததால் வருவாய்த்துறையில் விண்ணப்பித்தார்.

கடந்த ஆண்டு அவருக்கு மாத வருமானம் 60,000 எனக் குறிப்பிட்டு ஆண்டுக்கு 7.2 லட்சம் என நிர்ணயித்து சான்று வழங்கப்பட்டது. அதனால், அவரால் சத்துணவுப் பணியாளர் பணிக்குத் தேர்வு செய்யப்படவில்லை. இந்த ஆண்டு அவர் அதே பொறுப்புக்கு விண்ணப்பம் செய்தார். ஆனால், இந்த ஆண்டும் அவருக்கு அதே தொகைக்கே சான்று தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூலி வேலை செய்து கடும் சிரமத்துக்கு இடையே குடும்பம் நடத்தும் அவருக்கு இதனால் பணி கிடைக்காத நிலை உருவானது.

பெண் விஷம் அருந்த முயற்சிஇதையடுத்து, வருவாய்த் துறையினரின் தில்லு முல்லு குறித்து ஆட்சியரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பிரேமா திடீரென தான் கொண்டுவந்திருந்த விஷத்தை எடுத்து குடிக்க முயன்றார். அபோது அங்கிருந்த போலீஸார் அவரிடம் இருந்து விஷ பாட்டிலை பறித்ததால் அவர் உயிர்த் தப்பினார். பின்னர் பேசிய பிரேமா,
"வருவாய்த் துறை அதிகாரிகள் என்னிடம் இருந்து பணத்தை எதிர்பார்த்து இது போல தொடர்ந்து எனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். அவர்களின் செயலால் எனக்குக் கிடைக்கவிருந்த வேலை வாய்ப்பு பறிபோனது.

சாதாரண கூலி வேலை செய்து வரும் எனக்கு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்குறவங்கள் அளவுக்குச் சான்று கொடுத்தாங்க. அதனால், என்னால் வேலைக்குச் செல்ல முடியாமல் குடும்பத்தை வழிநடத்தவும் முடியாமல் அவதிப்பட்டேன். என பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்கக் கூட முடியாத நிலையில் இருக்கிறேன். அதனால்தான் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவுக்குச் செல்ல வேண்டியதாகி விட்டது’’ என்றபடி கலங்கினார். அவருக்கு ஆறுதல் சொன்ன போலீஸார், அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.