கேரளாவில் கனமழை..! மீனவர்களுக்கு எச்சரிக்கை..! | Heavy rain in Kerala: Fishermen received red alert

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (21/08/2017)

கடைசி தொடர்பு:20:45 (21/08/2017)

கேரளாவில் கனமழை..! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

 

கடந்த ஆண்டு கேரளாவில் போதிய மழை இல்லாததால் குடிநீருக்கு மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை மாநிலம் முழுவதையும் நனைத்து விட்டது. இதனால் கேரளாவில் உள்ள அணைகள், நீர்நிலைகளில் கணிசமான அளவு நீர்மட்டம் உயர்ந்தது. சபரிமலையிலும் கனமழை பெய்ததில் பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மழையின் தீவிரம் குறைந்தது. தற்போது மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் இடுக்கி, காசர்கோடு, பாலக்காடு, எர்ணாகுளம், விதுரா போன்ற பகுதிகளில் விடிய விடிய மழை பெய்கிறது.

மழை

அதிகமான கனமழை விதுரா, இடுக்கிப் பகுதியில் பெய்துள்ளது. கனமழை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வருகிற 24-ம் தேதி வரை கனமழை இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் மாவட்டங்களில் ஆட்சியர்கள் முன் எச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிக்கு மாற்றும் பணிகளும் நடந்து வருகின்றன. பூவார் சிறையின் கீழ்,கோவளம் போன்ற கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் 24-ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையின் போது பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் தங்கள் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க