Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசு ஊழியர்களிடம் பேசுவதை விட்டுவிட்டு மிரட்டுவதா? - முத்தரசன் கண்டனம் 

அரசு ஊழியர்

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு முன்வருவதை விட்டுவிட்டு, போராட்டத்தில் ஈடுபடும் அரசுப் பணியாளர்கள்- ஆசிரியர்களை மிரட்டும் போக்கை கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். 

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போராடும் அரசுப் பணியாளர்கள் - ஆசிரியர்களை அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு தவறிவிட்டது. தலைமைச் செயலாளர் மூலமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ள அரசுப் பணியாளர்கள் - ஆசிரியர்களை மிரட்டுகிறது. வேலைநிறுத்தப் போராட்டித்தில் ஈடுபடவுள்ள அரசுப் பணியாளர்கள் - ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தமிழக அரசு மிரட்டுவது கண்டனத்துக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார். 

முத்தரசன்

மேலும், “பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, எட்டாவது ஊதிய மாற்றத்தை 01.01.2016 தேதி முதல் அமல்படுத்த வேண்டும், இடைக்கால நிவாரணமாக 20 விழுக்காடு ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். நிரந்தரப் பணியிடங்களில் பணியாற்றும், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஒப்பந்த முறை, தினக்கூலி முறை, வெளி ஆதாரமுறை அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கி, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் ஆகிய உட்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக அரசுப் பணியாளர்கள் - ஆசிரியர்கள் “ஜாக்டோ – ஜியோ” என்ற கூட்டமைப்பை உருவாக்கிப் போராடிவருகிறார்கள். 

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மாபெரும் பேரணியை நடத்தினர். ஆகஸ்ட் 16-ம் தேதி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பிரசார இயக்கங்களை நடத்தினர். அரசு இதுவரை அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தவிர்க்க முடியாமல் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (22.8.2017) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய “ஜாக்டோ – ஜியோ” கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம், அரசின் செயலற்றத் தன்மையால் அரசுப் பணியாளர்கள் - ஆசிரியர்கள் மீது திணிக்கப்பட்டப் போராட்டம் ஆகும்.

நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் அரசுப் பணியாளர்கள் – ஆசிரியர்களுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. ’ஜாக்டோ – ஜியோ’ கூட்டமைப்புத் தலைவர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்றும் முத்தரசன் கூறியுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement