தினகரன் கோஷ்டி எம்எல்ஏ-க்கள் கவர்னரைச் சந்திக்க திடீர் முடிவு! | Dinakaran faction likely to meet Governor

வெளியிடப்பட்ட நேரம்: 20:02 (21/08/2017)

கடைசி தொடர்பு:21:03 (21/08/2017)

தினகரன் கோஷ்டி எம்எல்ஏ-க்கள் கவர்னரைச் சந்திக்க திடீர் முடிவு!

அ.தி.மு.க-வில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடந்துவருகின்றன. இரு துருவங்களாக இயங்கிவந்த எடப்பாடி கோஷ்டியும் ஓ. பன்னீர்செல்வம் கோஷ்டியும் இணைந்துவிட்டனர். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்தினார்கள். அதையடுத்து, இன்று இரவு தினகரனும், அவரது ஆதரவு எம்எல்ஏ-க்களும் ஜெயலலிதா சமாதிக்கு மரியாதை செலுத்த வருகிறார்கள். 
முக்கியமான முடிவுகளை அப்போது அவர் அறிவிக்கவிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சொல்லுகிறார்கள். 

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்


தமிழக துணை முதல்வர் பதவியில் அமர்ந்துவிட்டார் ஓ. பன்னீர்செல்வம். அ.தி.மு.க-வில் சபாநாயகரைத் தவிர 134 எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள். சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிக்க 117 எம்எல்ஏ-க்கள் தேவை. ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டியில் 10 எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள். தினகரன் கோஷ்டியில் 18 எம்எல்ஏ-க்கள் இருப்பதாக அவர்கள் தரப்பில் சொல்லுகிறார்கள். எடப்பாடி கோஷ்டியில் 99 எம்எல்ஏ-க்கள் இருக்கலாம் என்பது ஒரு கணக்கு. 

இப்படியிருக்க...அண்மையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீடியாக்களிடம் பேசும்போது, 'ஓ.பி.எஸ். தரப்பினர் எங்களுடன் சேர்ந்தால், மேற்கொண்டு இரண்டு எம்எல்ஏ-க்கள் மெஜாரிட்டி காட்டத் தேவைப்படுவார்கள். அதுதான்........... பாதாளம் வரை பாயுமே?' என்று பொடி வைத்து முதலில் பேசிவிட்டு உஷாரானார்.  பாசம் பாதளம் வரை பாயுமே? என்று சமாளித்தார். ஆக, அமைச்சர் சீனிவாசன் சொல்கிறபடி, எடப்பாடி கோஷ்டியில் பெரும்பான்மை எம்எல்ஏ-க்கள் இல்லை. மைனாரிட்டி அரசு என்பது தெளிவாகிறது என்று எதிர்கட்சியினர் குரல்கொடுத்தனர்.

தினகரன்

இந்தநிலையில், எடப்பாடியும் ஓ.பன்னீர்செல்வமும் ஒரே அணியில் சேர்ந்தும், விரைவில் பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் நீக்குவோம் என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம். இவரின் இந்தப் பேச்சு தினகரன் கோஷ்டியினருக்குக் கடுங்கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. சசிகலாவை நீக்க விட்டால்தானே?...அதற்கு முன்பே, ஆட்சியை கவிழ்த்துவிடுவோம் என்று எச்சரித்துள்ளனர். எடப்பாடி கோஷ்டியினருக்குத் தங்களது எதிர்ப்பைக் காட்டும் வகையில், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை தினகரன் தரப்பு எம்எல்ஏ-க்கள் நேரில் சந்திக்க முடிவெடுத்துள்ளனர். முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கையுடன் சந்திக்கவிருக்கிறார்கள். முடிவெடுக்கவேண்டிய இடத்தில் உள்ள கவர்னர் அடுத்த என்ன செய்வார் என்பதுதான் சஸ்பென்ஸாக இருக்கிறது.

நாளை காலை 10 மணிக்கு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்க கவர்னர் நேரம் ஒதுக்கியுள்ளார்.

-ஆர்.பி