'தமிழக முதல்வரும், அமைச்சர்களும் மத்திய அரசுக்குக் காவடி தூக்குவதா?' -வைகோ!

ளுங்கட்சியான அ.தி.மு.க-வில் அணிகள் இணைப்பும், மந்திரி பதவி பரிமாற்றமும் நடந்துள்ள அதேநாளில் ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ கைதாகி இருக்கிறார். முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்து கொளுத்தும் வெயிலில் வைகோ போராட்டம் நடத்திக்கொண்டிருந்த அதேவேளையில் 'இணைப்பு' பேச்சுவார்த்தை பரபரப்பில் மூழ்கிக்கிடந்தது, ஆளுங்கட்சி. சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்றுதான் அந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் மையக் கருவே, மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடகாவைக் கண்டிக்கத் தவறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதுதான். ஆனால், வைகோ இந்த வாய்ப்பை, மோடி அரசை சாடுவதற்கு வலுவாகப் பயன்படுத்திக்கொண்டார்.

வைகோ

"தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மையார் என்னைச் சிறையில் அடைத்தவர்தான், அதை நான் மறக்கவில்லை. அதேவேளையில், தமிழகத்தின் உரிமைகளை ஒருபோதும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை என்பதையும் மறக்கவில்லை. இன்று, ஜெயலலிதாவின் கொள்கையை, உறுதியை அடகு வைத்துவிட்டு முதலமைச்சரும், அமைச்சர்களும் மத்திய பி.ஜே.பி அரசுக்குக் காவடி தூக்கிக்கொண்டிருக்கிறார்கள்" என்று வைகோ கர்ஜித்தார். வேறு எந்தக் கட்சியையும் இங்கே விமர்சிக்காத வைகோ, பி.ஜே.பி. தலைவர் அமித் ஷாவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக எச்சரித்தார். அடுத்ததாக, ஹெச்.ராஜா மீது பாய்ந்த வைகோ, அவர் குறித்து கடுமையான சொற்களைக் குறிப்பிட்டபோது தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். ம.தி.மு.க. நிர்வாகிகள், கணேசமூர்த்தி, மல்லை சத்யா, கழக குமார், என்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அதிகபட்சம் முன்னூறு பேர்வரை பங்கேற்றாலும் அனைவரும் உற்சாகம் குறையாமல் கோஷமிட்டதைக் காண முடிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!