Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'வாங்க நீச்சல் பழகலாம்'- இப்படிக்கு 5-வது வார்டு ரோடு!

                   
 

கரூர் நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டில் உள்ள அந்தப் பிரதான சாலை. அந்த வார்டில் உள்ள முக்கியப் பகுதிகளான எம்.ஜி.சாலை, கொங்கு மெட்ரிக் பள்ளியிலிருந்து, கே.வி.பி நகர், விஜய் நகர், கணேஷ் நகர் மற்றும் பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குப் போகும் முக்கிய சாலை அது. அங்கே நின்ற இரண்டு கிராமத்துப் பெருசுகள் சாலையின் நடுவே தேங்கியிருக்கும் மழைநீரைப் பார்த்ததும், முகம் முழுக்க தோன்றிய மகிழ்ச்சியோடு ஒருவர் மற்றொருவரிடம்,"ஏ யப்பா, நாம கிராமத்துல இருந்து இங்க வர்றதுக்குள்ள மழை ஒரு புடி புடிச்சுருக்கும் போலப்பு. எக்கச்சக்க மழை போல இருக்கு. இப்படி ஆளு முழுகுற அளவுக்குத் தண்ணீர் தேங்கி இருக்கே. கண்டிப்பா அப்ப நம்ம ஊர்லயும் கடும் மழை பேஞ்சுருக்கும். ஊருக்குப் போனதும் நாளைக்கு முத வேலையா தரிசா கெடக்குற நிலத்தை உழுது, ஏதாச்சும் பயிர் பச்சையை விளைவிச்சுரனுமப்பு. மகமாயி புண்ணியத்துல நாலு காசு பாத்துப்புடனும்" என்று சொல்ல, மற்றொருவர்,"சரியா சொன்ன" என்று பதில் உரைத்தார்.


 

ஆனால், இவர்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த அந்தப் பகுதி இளைஞர் ஒருவர், "ஏங்க எங்க வயித்தெரிச்சலை கிளர்றீங்க. இது இன்னைக்குப் பேஞ்ச மழை தண்ணி இல்லை. பத்து நாளைக்கு முன்னாடி பேஞ்ச மழை தண்ணி. அந்த அளவுக்கு நடுசாலையில குழி ஆழமா இருக்கு. அதான், பத்து நாளாகியும் மழை தண்ணீர் வடியாம தேங்கிக் கிடக்கு. முக்கியமான சாலை இது. காலையில், அலுவலகம் போவோர்களும், பள்ளி, கல்லூரி போகும் மாணவர்களும் இந்தச் சாலை வழியாதான் போய் வர்றோம். ஆனால், இந்த இடத்துல பலரும் டூவீலர்கள், சைக்கிள்ன்னு வாகனங்கள் போகும்போது சறுக்கி, தண்ணீரில் விழுந்துடுறாங்க. தினமும் யாரோ ஒருத்தர் அப்படி இந்தப் பள்ளத்து தண்ணியில தொபுக்கடீர்ன்னு விழுந்துடுறார். இன்னொருபக்கம், இவ்வளவு தண்ணீர் தேங்கி நிற்பதால், இதில் லட்சக்கணக்கான கொசுக்கள் உற்பத்தியாகி இந்த ஏரியா முழுக்க உள்ள வீடுகளுக்குள் வாடகை தராம குடி வந்துட்டாங்க. இதனால், பலருக்கும் மர்மக்காய்ச்சல் வருது. 'இந்தச் சாலையை சரி பண்ணி தாங்க'ன்னு ஏரியா கவுன்சிலர்கிட்ட கேட்டா,'என் பதவி முடிஞ்சு மாசக்கணக்காவுது. கைகாச போட்டா ரோடு போட முடியும்?'ங்கிறார். நகராட்சி அதிகாரிகள்ட்ட புகார் சொன்னா, 'கரூர் நகரத்துக்குள்ள இதுபோல பல சாலைகள் இருக்கு. ஒவ்வொண்ணாதான் சரி பண்ண முடியும்'ன்னு ஒவ்வொரு முறையும் சொல்றாங்க. லேசா மழை பேஞ்சாலே இந்தச் சாலை குளம் போல் ஆகி,'வாங்க நீச்சல் பழகலாம்'ன்னு எங்களை இம்சைப்படுத்துது. இந்தச் சாலையை சரி பண்ணலன்னா, இதுல கப்பல் விடுற போராட்டம் அறிவிக்கலாம்ன்னு இருக்கோம்" என்று சொல்ல,"அப்படியா சங்கதி. அப்ப நம்மூர்லயும் பொட்டுத் தூத்தல் விழுந்து இருக்காது. பழையபடி நிலத்த தரிசா போட வேண்டியதுதான்" என்று தங்கள் கவலையை முணுமுணுத்தபடி கலைந்தார்கள் அந்த இரண்டு பெருசுகளும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement