பணத்துக்காக ஆள் கடத்தல்..! இரண்டு பெண்கள் உள்பட ஏழு பேர் கைது..! | seven persons has been arrested by police for kidnap case

வெளியிடப்பட்ட நேரம்: 01:10 (22/08/2017)

கடைசி தொடர்பு:07:36 (22/08/2017)

பணத்துக்காக ஆள் கடத்தல்..! இரண்டு பெண்கள் உள்பட ஏழு பேர் கைது..!

திருச்சியில் பணத்துக்காக பெண்களை உடந்தையாக வைத்து 2 நபர்களை காருடன் கடத்திய கும்பலை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 

பணத்துக்காக கடத்தல்

திருச்சியில் ஆல்ப்ரோ டெக் பி. லிமிட் எனும் நிறுவனம் நடத்தி வரும் அப்துல் அஜீஸ் என்பவரை கடந்த 17-ம் தேதி காலை முதல் காணவில்லை என அவரது அலுவலக மேலாளர் சிவக்குமார் திருச்சி செசன்ஸ் கோர்ட் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார்.

காணாமல் போன அப்துல் அஜீஸை தேடிக் கண்டுபிடிக்க கண்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.

காவல்துறையினரின் விசாரணையில் அப்துல் அஜீஸின் மனைவி மற்றும் அஜீஸின் மேலாளரிடம் செல்போனில் பேசிய நபர்கள், பல நபர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் போடச் சொல்லி வற்புறுத்தியுள்ளதும், அதன்படி அஜீஸின் குடும்பத்தார் 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளதும் தெரியவந்தது. மேலும், அப்துல்அஜீஸ் அவரது காருடன் கடத்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கடந்த 19-ம் தேதி அப்துல் அஜீஸ் மற்றும் அவரது காரை கொடைக்கானலில் மீட்டனர். மேலும் அஜீஸிடம் நடத்திய விசாரணையில், அவரிடம் வேலை பார்க்கும் மணிகண்டன் என்பவரும் கடத்தப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அப்துல் அஜீஸ் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொடைக்கானல் லேக் அருகே மணிகண்டனை காவல்துறையினர் மீட்டனர். காவல்துறையினர் தொடர் விசாரணையில் அப்துல் அஜீஸை கடத்திய காளிமுத்து, ரஞ்சித், ஜிம் கார்த்திக், சரவணன், அஜித் ஆகியோரை கைதுசெய்தனர்.

மேலும் அவர்களுக்கு உதவியாக இருந்த சாந்தி மற்றும் மோனிசாபானு ஆகியோரையும் கைதுசெய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் விக்கி, வெங்கடேசன் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். அவர்களது வங்கிக் கணக்குகள் அனைத்தும் நீதிமன்றத்தின் உதவியுடன் முடக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் திருச்சி நடுவர் நீதிமன்றம் 2-ல் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். தலைமறைவாக உள்ள விக்கி உள்ளிட்டோரை தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.