திருப்பூரில் குடிநீர் பற்றாக்குறை..! பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வசதி கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

அவிநாசி வட்டாரத்தைச் சேர்ந்த புள்ளேகவுண்டன்புதூர், கொட்டக்காட்டுபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 15 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படும் ஆற்றுக்குடிநீர், கடந்த சில மாதங்களாக  விநியோகிக்கப்படாமல் இருக்கிறது. இது தொடர்பாக பல முறை அரசு அலுவலகங்களில் புகார் அளித்தும் எந்தவித தீர்வும் கிடைக்கப்பெறவில்லை.

கடும் குடிநீர் தட்டுப்பாட்டில் சிக்கித்தவிக்கும் இப்பகுதி மக்கள், தங்கள் பகுதியில் முறையான குடிநீர் விநியோகம் வேண்டி இன்று புளியம்பட்டி சாலையில் 4 மணிநேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு புதிய ஆழ்குழாய்கள் அமைத்தும், லாரி மூலமும் குடிநீர் விநியோகம் செய்வதாகவும் உறுதியளித்த பிறகே பொதுமக்கள் தங்களின் போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!