வெளியிடப்பட்ட நேரம்: 01:27 (22/08/2017)

கடைசி தொடர்பு:07:46 (22/08/2017)

எரிவாயு குழாய்களை பதிக்க விவசாயிகளுக்கு நோட்டீஸ்: நிலத்தை ஒப்படைக்க 21 நாள் கெடு!

வேலூர் மாவட்டம், லாலாப்பேட்டை, எடப்பாளையம், பொன்னை, வசூர், பள்ளேரி, புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் சார்பில் விளைநிலங்களின் வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் சித்தூர் அருகேயுள்ள தூங்குன்றம் பகுதியில் இணைக்கப்பட உள்ளது. ஏற்கனவே ஆந்திராவில், சென்னையிலிருந்து -சித்தூர் வரை 60 அடி அகலத்தில் விளைநிலங்களின் வழியாக ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு சித்தூர் அருகே யாதமரியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

vellore farmers

சுமார் 100 அடி அகலத்துக்கு, இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகவும், 10 அடி ஆழத்தில் ராட்சத குழாய்கள் புதைக்கப்பட்டு கொண்டு செல்ல அளவீடு பணிகள் முடிந்து பூர்வாங்க பணிகள் துவங்கிவுள்ளது. இவ்வாறு குழாய்கள் விளைநிலங்கள் வழியாக பதிக்கப்படுவதற்கு விவசாயிகளுக்கு எந்த நஷ்ட ஈடும் வழங்குவதில்லை. ஆனால், பயிர் இருந்தால் மட்டும் ஒரு ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது . இந்த குழாய்கள் பதிக்கபடும் 60 அடி அகலத்துக்கு அந்தப் பகுதிகளில் மரங்கள் நடக் கூடாது, வீடுகள் கட்டக் கூடாது, ஆழ்துளை கிணறுகள் அமைக்கக் கூடாது. அத்துடன் அந்தக் குழாய் பதித்த நிலங்களை விவசாயிகள் யாருக்கு விற்கக் கூடாது. அவ்வாறு விற்றாலும் செல்லாது என சட்டத்திட்டங்களை இந்தியன் ஆயில் நிறுவனம் போட்டுள்ளது.

விளைநிலங்களின் வழியாக குழாய் பதிப்பதைக் கொண்டு செல்லாமல் சாலையோரம் கொண்டு செல்ல வேண்டும், இல்லையென்றால் இந்த திட்டத்தை கைவிட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். லாலாப்பேட்டை, எடப்பாளையம், முகுந்தராயபுரம், கத்தாரிக்குப்பம், கிருஷ்ணாபுரம், குமனந்தாங்கல், கொண்டக்குப்பம், பள்ளேரி, வசூர், கொடியூர் மிளகாய்குப்பம், அண்ணாநகர், சின்னகம்மராஜபுரம், நெல்லிகுப்பம், தண்டுக்காரன் மோட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் மத்திய அரசு செயற்கைகோள் மூலம் ஆய்வுகள் நடத்தி அங்கு எரிவாயுகள் இருப்பதைக் கண்டறிந்து, மத்திய அரசே நேரடியாக விவசாயிகளின் அனுமதியின்றியும், மாநில அரசின் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமலும் எரிவாயு இருக்கும் இடங்களைக் குறியீடு செய்துள்ளது. 

எரிவாயுக்கள் அங்கிருந்து எடுக்கப்பட்டு குழாய் மூலம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதுகுறித்து மாநில அரசு அதிகாரிகளோ மாவட்ட நிர்வாகமோ தங்களுக்குத் தெரியாது என்று கூறி வந்த நிலையில் தற்போது இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் நிறுவனம் விவசாயிகளின் விளைநிலங்களைக் கையக்கப்படுத்துவதற்கான அறிவிப்பை, ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்தனியாக வழங்கி வருகின்றனர். நில உபயோக உரிமை கையகப்படுத்துதல் 1962 -ம் ஆண்டு சட்டம் பிரிவு 3 உட்பிரிவு 1 கீழ் இந்த அறிவிப்பு நில விவசாயிகளிடம் நோட்டீசாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீசை திருவள்ளூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் நிறுவனத்தின் திட்ட அலுவலர், வேலூர் மாவட்ட வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்களின் விளைநிலங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்க கூடாது எனவும், கடைசி வரை போராடி இதைத் தடுப்போம் எனவும் இங்கு ஒரு கதிராமங்கலம் உருவாக்கப்பட வேண்டாம் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர். இதை எதிர்த்து பெரிய அளவில் போராட்டத்திலும் குதிக்க முடிவுசெய்துள்ளனர். இந்த குழாய்கள் புதைக்கப்பட்டு ஆந்திர மாநிலம் சித்தூரில் தூங்குன்றம் என்ற இடத்தில் இணைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.