மூன்று ஆண்டு தாமதத்துக்குப் பின் வழங்கப்பட்ட அடையாள அட்டை!

மூன்று  ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டு வந்த திருநங்கைக்கான அடையாள அட்டை இன்று மாலை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரால் நஸ்ரியா -க்கு வழங்கப்பட்டது.

பரமக்குடியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் உடலில் ஏற்பட்ட மாறுதலை அடுத்து 2013-ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். திருநங்கையாக மாறிய அவர் தனது பெயரையும் நஸ்ரியா என மாற்றிக் கொண்டார். ப்ளஸ் டூ வரை படித்துள்ள நஸ்ரியா அஞ்சல் வழியாக இளங்கலை ஆங்கில பட்டப்படிப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில், தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த நஸ்ரியா கடந்த மாதம் 31-ம் தேதி ராமநாதபுரத்தில் நடந்த உடல் தகுதி தேர்வில் பங்கேற்கச் சென்றார். ஆனால், திருநங்கைக்கான சான்றிதழ் இல்லை எனக் கூறி அவரை உடல் தகுதி தேர்வில் பங்கேற்க அனுமதி அளிக்கவில்லை. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை (ஆகஸ்ட் 22) விசாரணைக்கு வருகிறது.

திருநங்கைக்கான அடையாள அட்டையை பெற்ற நஸ்ரியா
 இதைத் தொடர்ந்து இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்திருந்த நஸ்ரியா, 'திருநங்ககைக்கான சான்றிதழை வழங்காமல் சமூக நலத்துறையினர் கடந்த 3 ஆண்டுகளாக தாமதம் செய்வதாகவும், இன்று தனக்கு சான்றிதழ் வழங்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்' என மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அங்கிருந்த சமூக நலத்துறை அலுவலர்கள் நஸ்ரியாவை சமாதானம் செய்து தங்கள்  அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், இன்று மாலை சமூக நலத்துறையினர் திருநங்கை நஸ்ரியாவுக்கு திருநங்கைக்கான அடையாள அட்டையைத் தயார் செய்தனர். அந்த அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர் முனைவர் நடராஜன் திருநங்கை நஸ்ரியாவிடம் வழங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!