வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (22/08/2017)

கடைசி தொடர்பு:11:05 (22/08/2017)

'சசிகலாவை நீக்கும் முன்பே ஆட்சியைக் கவிழ்த்துவிடுவோம்'- வரிந்துகட்டும் 19 எம்.எல்.ஏ-க்கள்

ttv dinakaran

அ.தி.மு.க-வில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடந்துவருகின்றன. இரு துருவங்களாக இயங்கிவந்த எடப்பாடி கோஷ்டியும் ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டியும் இணைந்துவிட்டனர். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்தினார்கள். அதையடுத்து, இன்று இரவு தினகரனும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் ஜெயலலிதா சமாதிக்கு மரியாதை செலுத்த வருகிறார்கள். 
முக்கியமான முடிவுகளை அப்போது அவர் அறிவிக்க இருப்பதாக, அவரது ஆதரவாளர்கள் சொல்லுகிறார்கள். தமிழகத் துணை முதல்வர் பதவியில் அமர்ந்துவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வில் சபாநாயகரைத் தவிர 134 எம்.எல்.ஏ-கள் இருக்கிறார்கள். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏ-க்கள் தேவை. ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டியில் 10 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். தினகரன் கோஷ்டியில் 18 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாக அவர்கள் தரப்பில் சொல்கிறார்கள். எடப்பாடி கோஷ்டியில் 99 எம்.எல்.ஏ-க்கள் இருக்கலாம் என்பது ஒரு கணக்கு.

இப்படியிருக்க... சமீபத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீடியாக்களிடம் பேசும்போது, 'ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் எங்களுடன் சேர்ந்தால், மேற்கொண்டு இரண்டு எம்.எல்.ஏ-க்கள் மெஜாரிட்டி காட்ட தேவைப்படுவார்கள். அதுதான்... பாதாளம் வரை பாயுமே' என்று பொடிவைத்து முதலில் பேசிவிட்டு உஷாரானார். பாசம் பாதாளம் வரை பாயுமே என்று சமாளித்தார். ஆக, அமைச்சர் சீனிவாசன் சொல்கிறபடி, எடப்பாடி கோஷ்டியில் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் இல்லை. மைனாரிட்டி அரசு என்பது தெளிவாகிறது என்று எதிர்க்கட்சியினர் குரல்கொடுத்தனர். இந்த நிலையில், எடப்பாடியும் ஓ.பன்னீர்செல்வமும் ஒரே அணியில் சேர்ந்தும், விரைவில் பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து  நீக்குவோம் என்றார், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம். இவரின் இந்தப் பேச்சு, தினகரன் கோஷ்டியினருக்கு கடுங்கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. சசிகலாவை நீக்க விட்டால்தானே... அதற்கு முன்பே, ஆட்சியைக் கவிழ்த்துவிடுவோம் என்று எச்சரித்துள்ளனர். எடப்பாடி கோஷ்டியினருக்கு தங்களது எதிர்ப்பைக் காட்டும் வகையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-கள் நேரில் இன்று சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர். 'முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கிற கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்பட்டுகிறது. முடிவெடுக்கவேண்டிய இடத்தில் உள்ள ஆளுநர், அடுத்து என்ன செய்வார் என்பதுதான் சஸ்பென்ஸாக இருக்கிறது.                    

நீங்க எப்படி பீல் பண்றீங்க