வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (22/08/2017)

கடைசி தொடர்பு:11:25 (22/08/2017)

சொத்துக்குவிப்பு வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் சசிகலா புதிய கோரிக்கை!

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு புதிய கோரிக்கை வைத்துள்ளது. 

சசிகலா


சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு  நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தண்டனைபெற்றவர்கள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்து, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துசெய்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்தது. ஜெயலலிதா உயிரிழந்ததால், வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், தண்டனைக்கு எதிராக சசிகலா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், வழக்கின் விசாரணையை திறந்தவெளி நீதிமன்றத்தில் (Open Court) நடத்த வேண்டும் என்றும் சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.