வெளியிடப்பட்ட நேரம்: 11:57 (22/08/2017)

கடைசி தொடர்பு:12:11 (22/08/2017)

“சசிகலா விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்ய என்ன அரசியலும் நடக்கலாம்!” - ரூபா

ரூபா டி.ஐ.ஜி

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுவரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான சசிகலாவும் அவருடைய உறவினரான இளவரசியும் கைப்பையுடன் வெளியில் இருந்து சிறைக்குள் நுழையும் இரண்டாவது வீடியோ காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்குச் சிறையில் சலுகைகள் வழங்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. சிறையில் இருந்த அதிகாரிகள் இரண்டு கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு சசிகலாவுக்குத் தேவையான சலுகைகளை வழங்கியிருந்ததாகச் சிறைத்துறை டி.ஐ.ஜி-யாகப் பொறுப்பிலிந்த ரூபா, கர்நாடக காவல் துறைக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி வினய்குமார், ரூபா மற்றும் சத்திய நாராயண ராவ் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது சசிகலா மற்றும் அவருடைய உறவினரான இளவரசியும் சிறைத் துறையின் விதிகளை வளைத்துப் பணத்தைக் கொடுத்து எவ்வாறு சலுகைகள் பெற்றார்கள் என்பதற்கான ஆதாரங்களை வழங்கியதாகச் சொல்லப்பட்டது.

இது தொடர்பாக 74 ஆதாரங்களையும் வீடியோ காட்சிகளையும் ரூபா கொடுத்ததாகச் சொல்லப்பட்டது. அந்த விசாரணை நடைபெற்றபோது, சசிகலாவும் இளவரசியும் வெளியில் செல்லும் வீடியோ காட்சி வெளியாகி இருந்தது. இந்த நிலையில், இரண்டாவது வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் சசிகலாவும், இளவரசியும் வெளியே சென்றுவிட்டு மீண்டும் சிறைக்குள் நுழையும் காட்சி வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பாகப் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த ரூபா, “இது தொடர்பாக என்னிடம் இருந்த ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளேன். வீடியோ காட்சிகளையும் ஆவணங்களையும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பு மற்றும் கர்நாடக அரசு அமைத்துள்ள விசாரணைக் கமிட்டியிடம் கொடுத்துவிட்டேன். ஏற்கெனவே ஒரு வீடியோ சமர்ப்பித்திருந்தேன். தற்போது மற்றொரு வீடியோவும் கிடைத்துள்ளது. அந்த வீடியோவில், சசிகலாவும் இளவரசியும் சிறைக்கு வெளியே சென்றுவிட்டு உள்ளே நுழையும் காட்சி பதிவாகியிருக்கிறது. இது, சிறை விதிகளுக்கு எதிரானது. பரோல் இல்லாத எந்தக் கைதியும் வெளியில் செல்ல முடியாது.

 

அப்படியிருக்கும்போது சசிகலா செய்திருக்கும் இந்தச் செயலானது சட்டத்துக்கு எதிரானது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், என்னுடைய கடமை என்னவோ, அதன் அடிப்படையில் நான் தயார் செய்த ரிப்போர்ட்டும் இருந்துள்ளது. இதில், என் கடமையை மட்டுமே செய்துள்ளேன். அதன்மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். அப்படியும் எடுக்கவில்லை என்றால், அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை. அதற்குமேல் அது சிறை நிர்வாகத்தின் பொறுப்பாகிவிடுகிறது. அந்த விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்வதற்காக என்ன அரசியல் வேண்டுமானாலும் நடக்கலாம். மேலும், இதுதொடர்பாகக் கர்நாடக காங்கிரஸ் நிர்வாகி ஒருவரும் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், நான் சொன்ன அனைத்தையும் அவரும் சொல்லியுள்ளார். நான் சொல்லாத ஒன்றையும் அவர் சொல்லியுள்ளார். ‘ஒருமுறை, சசிகலாவை ஆர்.என்.ஜி சாலையில்  பார்த்தேன் என்றும், அதைக் கண்டு தாம் அதிர்ச்சியுற்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அதுகுறித்து வெளியில் சொன்னால் நம்மைத்தான் மனநிலை சரியில்லாதவர் என்று சொல்லிவிடுவார்கள் என்பதால் அமைதியாக இருந்துவிட்டேன்' என்று அவர் குறிப்பிட்டிருந்த கடிதத்தைப் படித்துத் தெரிந்துகொண்டேன்” என்றார்.

சசிகலா சிறையில் இருந்து  வெளியே  செல்லும் காட்சி

 

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுவரும் சசிகலா தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சில குறைகளைச் சுட்டிக்காட்டி மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மறு சீராய்வு மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில், ''சசிகலா சிறையில் விதிகளை வளைக்கப் பணம்கொடுத்தது, வெளியே சென்று வந்ததது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி இருப்பது அவருக்குச் சிக்கலை ஏற்படுத்தும்'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


டிரெண்டிங் @ விகடன்