தூத்துக்குடியில் ரூ.3 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல்

தூத்துக்குடியில், கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த இருந்த ரூ.3கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை சுங்கத்துறையினர் பறிமுதல்செய்து, இது தொடர்பாக ஒருவரிடம் விசாரணைசெய்துவருகின்றனர். 

thoothukudi customs office

தூத்துக்குடியிலிருந்து  கடல் வழியாக போதைப்பொருள்கள், கடல் அட்டைகளைப் பதுக்கிவைத்துக் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது.  இந்நிலையில், தூத்துக்குடி மொட்டைக்கோபுரம் பகுதியில் சுங்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது, ஆட்டோவில் சாக்கில் பொட்டலங்கள் இருந்துள்ளது. அதை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைசெய்ததில், அதில் 24 கிலோ எடையுள்ள ’அசிஸ்’ என்ற போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, கூலிக்காக ஆட்டோ ஓட்டி வந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணைசெய்துவருகின்றனர். போதைப்பொருள் கொண்டுவரப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் ஏற்றிவந்த ஆட்டோ

இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் பேசியபோது, ‘’ தூத்துக்குடியிலிருந்து கடல்வழியாக இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த இருப்பதாகக் கிடைத்த தகவலின்படி, மொட்டைக்கோபுரம் பகுதியில் சோதனை நடத்தியபோது, ஆட்டோவில் இருந்த அசிஸ் என்ற போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடத்திவருகிறோம். இந்த 24 கிலோ அசிஸ் என்ற போதைப்பொருளின் மதிப்பு ரூ.3கோடி’’ என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இந்த போதைப் பொருள் கடத்த இருந்த படகின்மீது சுங்கத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், படகில் வந்த  ஐந்து பேர் தப்பியோடினர்.  தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோரப் பகுதிகளிலிருந்து போதைப்பொருள்கள் கடத்துவது தொடர்கதையாகி வருவதால், சுங்கத்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!