வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (22/08/2017)

கடைசி தொடர்பு:13:00 (22/08/2017)

உப்பாற்றில் ஊற்று தோண்டி குடிதண்ணீர் எடுக்கும் கிராம மக்கள்!

உப்பாற்றில் மணல் அள்ளுவதால், ஆறு கிராமங்களுக்கான குடிதண்ணீர் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருக்கிறார்கள். 

      

 

சிவகங்கை மாவட்டம் முளக்குளம் பஞ்சாயத்து சருகனேந்தல் கிராம மக்கள், உப்பாற்றில் குழிதோண்டி குடிநீர் எடுத்துவருகின்றனர். அப்பகுதி மக்களிடம் பேசியபோது, “கடந்த 25 ஆண்டுகளாக இந்த ஆற்றில் இருந்துதான் குடிநீர் எடுத்துவருகிறோம். எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள  முளக்குளம், நைனாங்குளம்,  சித்தலூர்,  மேலக்காவனூர், மானசேரி,  பெரியகோட்டை, முத்தலூர், முரசுபட்டி, இலந்தங்குடி நாட்டகுடி, நல்லாகுளம் ஆகிய கிராமங்கள் இந்த உப்பாற்றிலிருந்துதான் குடிப்பதற்கு தண்ணீர் எடுத்துவருகிறோம். இங்கிருந்து தண்ணீர் எடுப்பது இன்று நேற்று அல்ல; மூன்று தலைமுறையாக ஆற்றில் குழி தோண்டி தண்ணீர் எடுத்துவருகிறோம். எங்கள் ஊர் ஆற்றில் மூன்று அடி தோண்டினாலே, சுவையான குடிநீர் கிடைத்துவிடும். இது எங்களுக்கு தெய்வம் தந்த வரப்பிரசாதமாகக் கருதுகிறோம்.

 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,  தமிழக அரசு மணல் குவாரி அமைக்க ஏற்பாடுசெய்தது. அதை, நாங்கள் போராடித் தடுத்து நிறுத்தினோம். தற்போது, தனிநபர்கள் மணல் குவாரி அமைக்க ஏற்பாடுசெய்துவருகிறார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. வறட்சியான நேரத்தில் குடிதண்ணீர் எடுக்க காலை 6 மணியிலிருந்து 8 மணி வரையும் மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரையும் பெண்கள் மற்றும் பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகள் வரை காத்திருந்து தண்ணீர் அள்ளிச்செல்லவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்நிலையில், தனியார் மணல் அள்ள உள்ளே நுழைந்தால், எங்களுக்கான குடிதண்ணீர் ஆதாரம் கேள்விக் குறியாகிவிடும். அரசாங்கம் நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் செய்யாமல் இருந்தாலே நல்லதுதான்” என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க