வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (22/08/2017)

கடைசி தொடர்பு:11:59 (22/08/2017)

தனக்கு சமமாக உடன் நடந்து வந்த மனைவிக்கு விவாகரத்து!

னக்கு சமமாக உடன் நடந்து வந்த மனைவியை சவுதி கணவர் ஒருவர் உடனடியாக தலாக் அளித்து விவாகரத்துச் செய்துள்ளார். 

மனைவியை முத்தலாக் செய்த கணவர்

இஸ்லாமிய சட்டத்திட்டங்களைக் கடுமையாகப் பின்பற்றும் சவுதி அரேபியாவில் பெண்கள் தந்தை, கணவர், சகோதரர் போன்றவர்களின் துணையுடன்தான் வெளியிடங்களுக்குச் செல்ல முடியும். சிறு சிறு விஷயங்களுக்குக்கூட மனைவியை விவாகரத்துச் செய்யும் போக்கு சவுதியில் அதிகரித்து வருகிறது. அண்மையில், நடந்து செல்கையில் தனக்கு பின்வராமல் தனக்கு சமமாக நடந்து வந்த மனைவியைக் கணவர் ஒருவர் எச்சரித்துள்ளார். அதைப் பொருட்படுத்தாமல் மனைவி அவருக்குச் சமமாக நடந்து வந்ததால், தலாக் கூறி விவகாரத்துச் செய்துள்ளார். இது குறித்து சவுதி பத்திரிகை 'அல் வதான்' செய்தி வெளியிட்டுள்ளது. மனைவியை விவாகரத்துச் செய்த நபரின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

அதேபோல், உறவினர்களுக்கு வழங்கப்பட்ட விருந்தில் 'ஆட்டுத் தலை அவித்து வைக்கப்படாததால், மற்றோர் சவுதி கணவர் மனைவியை விவாகரத்துச் செய்துள்ளார். 'இரவு விருந்தின்போது ஆட்டின் தலை இருக்க வேண்டுமென்று தான் உத்தரவிட்டதாகவும் தன் கட்டளையை மனைவி மீறி விட்டதாகக் கூறி மனைவியைக் குடும்ப பந்தத்திலிருந்து வெளியேற்றியுள்ளார். தேனிலவின்போது, காலில் கொலுசு அணிந்திருந்ததற்காக இன்னொரு விவாகரத்து சவுதியில் நடந்துள்ளது. 

அற்ப காரணங்களுக்காக மனைவியை விவாகரத்துச் செய்யும் போக்கு இளைய தலைமுறை சவுதிகளிடம் அதிகரித்திருப்பதால் அந்நாட்டு அரசு அதிர்ந்துள்ளது. திருமணம் செய்யும் தம்பதியருக்கு குடும்பம் நடத்துவது, விட்டுக் கொடுப்பது, இருவரின் சுயமரியாதைக்கு இழுக்கு வராமல் நடந்துகொள்வது எப்படி என கவுன்சலிங் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க