லதா ரஜினி பள்ளியின் சீலை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

மாணவர்களின் நலன் கருதி, லதா ரஜினிகாந்த்தின் பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற, கட்டட உரிமையாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டியில், தி ஆஷ்ரம் பள்ளியை லதா ரஜினிகாந்த் நடத்திவருகிறார். இந்தப் பள்ளிக்கூடம், வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது. இதனிடையே, வாடகை தரவில்லை என்று கூறி கடந்த 16-ம் தேதி, கட்டடத்தின் உரிமையாளர் வெங்கடேஸ்வரலு என்பவர் பள்ளியைப் பூட்டினார். இதையடுத்து, பள்ளி மாணவர்கள் வேளச்சேரியில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று ஐஸ்வர்யா தனுஷ் சார்பில் முறையிடப்பட்டது. அப்போது, வழக்கறிஞர் இளம்பரிதி ஆஜராகி, "ஆஷ்ரம் பள்ளிக் கட்டடத்துக்கு பூட்டுப் போட்ட அதன் உரிமையாளரின் நடவடிக்கையினால், பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த உரிமையாளரிடமிருந்து 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டும், பூட்டை அகற்றக்கோரியும், பள்ளிக்கூடத்தின் செயலாளர் ஐஸ்வர்யா தனுஷ் வழக்குத் தொடர உள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவாக வழக்கை தாக்கல் செய்யுங்கள், நாளை (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறினார். இதையடுத்து, ஐஸ்வர்யா தனுஷ் சார்பில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கட்டட உரிமையாளருக்கு உத்தரவிட்டதோடு, பிற்பகல் 3 மணிக்குள் பள்ளிக் கட்டடத்தின் சீல் அகற்றப்பட்டுள்ளதா என்பதுகுறித்து வழக்கறிஞர் ஆணையர் குழு நேரில் ஆய்வுசெய்து தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!