வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (22/08/2017)

கடைசி தொடர்பு:15:30 (22/08/2017)

'அம்மா'வின் ஆன்மாவும், கொதிப்பிழந்த ரத்தத்தின் ரத்தங்களும்! #ADMKMerger

admk, அதிமுக

இதோ... அதோ… என இழுத்து ஒருவழியாக இணைந்துவிட்டார்கள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும். சிலபல விட்டுக்கொடுப்பு படலங்களும், அரியணை ஏற்றும் படலங்களும் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கின்றன. துணை முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வமோ, "என் மனதில் இருந்த பாரம் இறங்கிவிட்டது", என கூறியிருக்கிறார். ஆனால், அன்று ஜெ., சமாதியில் தியானத்தை முடித்ததும், “நாட்டு மக்களுக்கும், அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் சில உண்மை விவரங்களை தெரியப்படுத்த அம்மாவின் ஆன்மா என்னை உந்தியது”, எனப் பேசியிருந்தார். சகல உண்மைகளும் இப்போது தெரியவந்து விட்டதா?... உந்தித் தள்ளிய அம்மாவின் ஆன்மா இப்போது எங்கே இளைப்பாறிக் கொண்டிருக்கிறது?, இதுமட்டுமல்லாமல் இன்னும் பல கேள்விகளுக்கும் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே பதில் சொல்லமுடியும்.

அதிமுக, ops

நேற்று நடந்துமுடிந்த இரு அணிகள் இணைப்புக் காட்சிகளில் அதிகம் இடம்பிடித்த பெயர் ஆடிட்டர் குருமூர்த்தி. ஒருகட்டத்தில் லாயிட்ஸ் சாலையில் இருக்கும் அ.தி.மு.க அலுவலகம் போன்றே மாறிப்போயிருந்தது குருமூர்த்தியின் வீடு. அணிகள் இணைப்பில் இழுபறி தொடர்ந்ததால் இரு அணியினரின் முக்கியப் புள்ளிகளும் ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் கூடி, அவருடன் ஆலோசனை நடத்தினர். இந்த இரு அணிகளும் கலந்தாலோசிக்கும் மத்தியஸ்த மனிதராக ஆடிட்டர் குருமூர்த்தி காட்சி தந்ததுதான் ஹைலைட். ‘துக்ளக்’ ஆசிரியர் பொறுப்பு அத்தனை வலிமைமிக்கதாக இருக்கிறதுபோல. தமிழகத்தின் அரசியல் சதுரங்கத்தில் பல நேரங்களில் குழப்பம் ஏற்படும் போதெல்லாம் சம்பந்தப்பட்ட சிலர் ‘துக்ளக்’ ஆசிரியர் சோ-வின் வீட்டுக்கதவை தட்டுவார்கள். அல்லது தட்ட வைக்கப்படுவார்கள். சிலநேரங்களில் ‘சோ’வே முன்வந்து தலையைக் கொடுப்பார். எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டங்களிலும் சரி, 1996-ல் ஜி.கே. மூப்பனார் தலைமையிலான த.மா.கா - தி.மு.க கூட்டணிக்கு ரஜினி ஆதரவு தெரிவித்தபோது நடந்த உரையாடல்களிலும் சரி, ஆந்திராவில் நிகழ்ந்த எம்.எல்.ஏ-க்கள் குழப்பத்திலும் சரி, மத்திய அரசின் ஆளுகைகளிலும் சரி, பத்திரிகையாளர் என்பதைத்தாண்டி தனி அவதாரமெடுப்பார் 'சோ'. தற்போது, அந்த ‘மிஷன்’ ஆடிட்டர் குருமூர்த்தியிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஆனால், ‘சோ’வின் இடம் அவருக்கானது மட்டுமே. 

ஏற்கெனவே, 'அ.தி.மு.க அணிகளை மத்திய அரசு ஆட்டுவிக்கிறது' என்ற குற்றச்சாட்டுக்குக் குறைவில்லை. இந்நிலையில், அணிகள் இணைப்பு விவகாரத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் அ.தி.மு.க-வின் இரண்டு அணியினரும் குவிந்து, அந்தக்குற்றச்சாட்டை இன்னும் வலுவாக்கியிருக்கிறார்கள். ஒருவேளை, 'குருமூர்த்தியிடம் சென்று ஆலோசனை கேளுங்கள்' என எம்.ஜி.ஆர் இவர்கள் கனவில் வந்து சொல்லியிருப்பாரோ?.. இல்லை. ‘அம்மா’வின் ஆன்மா அவர்களை உந்தித் தள்ளியிருக்குமோ?.. அதற்கான விடை வெளிப்படையாகத் தெரிந்ததுதான். ஆனால், அதைவிட அசத்தலான காரணம் ஒன்றைச் சொல்லி நமக்கு 'கிச்சுகிச்சு' மூட்டுவார்கள். டி.வி-க்களை அணைத்துவிட்டாலும், இவர்களின் நாக்குகள் ஆடும் நடனத்தை சமூக வலைதளங்களில் பார்க்க வேண்டியிருப்பதுதான் நம் விதி!

                                அதிமுக, gurumoorthy                                 

ஓ.பன்னீர் செல்வத்துக்கு, தான் சொன்ன அறிவுரைகள் பற்றி ஆங்கில இதழ் ஒன்றுக்கு விரிவாக பேட்டியளித்திருந்தார் ஆடிட்டர் குருமூர்த்தி. அதைப் படித்தாலே இந்த விஷயத்தில் குருமூர்த்தியின் ஈடுபாடு பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தினர் கட்சியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதும், அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திடம் பல விஷயங்களை, தான் எடுத்துச் சொன்னதாக குருமூர்த்தி அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால், தமிழக முதல்வர் நாற்காலியுடன் நடந்த இந்த ‘தர்மயுத்த’த்துக்கு குருமூர்த்தியை சூத்திரதாரியாக நியமித்தது யார்?

இந்த விவகாரம் தொடர்பாக, 'ஃப்ரன்ட்லைன்' இதழின் ஆசிரியர் விஜயசங்கர் நம்மிடம் பேசியபோது, “கடந்த மூன்று வருடங்களாக பல வலதுசாரி சிந்தனையாளர்கள் அதிகமாக வெளிப்படத் தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத தைரியம் வந்துள்ளது. தங்களை நடுநிலையாளர்களாகக் காட்டிக்கொள்ளும் அவர்கள், வெளிப்படையாகவே பி.ஜே.பி-யை ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த விஷயத்திலும்கூட, அ.தி.மு.க-வின் இரண்டு அணியினரும் குருமூர்த்தியைப் பார்த்ததில் பி.ஜே.பி-யின் மறைமுக அரசியல் இருக்கத்தான் செய்கிறது. என்னைப்பொறுத்தவரை, ‘சொந்தக் கால்களில் நிற்கத் தெரியாதவர்கள், இன்று வேறு கால்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்’ அவ்வளவுதான்” என்றார். 

jayalalithaa, அதிமுக

அமித் ஷாவின் சென்னை வருகைக்கு முன்னரே, அ.தி.மு.க அணிகள் இணைப்பை முடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்களாம். ஆனால், அது சற்று தள்ளிப்போய் விட்டதால், அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க-வுடன் கூட்டணியை ஏற்படுத்திவிட வேண்டும் என்பதில் ஜெ. முதல்வராக இருந்தபோதே தீவிர ஆர்வம் காட்டியது பி.ஜே.பி. ஆனால், பி.ஜே.பி-யுடன் அப்போது கூட்டணி சேர்வதில் ஜெயலலிதாவுக்கு பெரியஅளவில் விருப்பம் இருக்கவில்லை. அவருக்கு தனி சக்தியாக வலம்வருவதில்தான் விருப்பம் அதிகம். ஜெயலலிதா தனக்கென ஒரு கோட்பாட்டை வைத்திருப்பார். தன் முடிவில் யாரேனும் கைவைத்துவிட்டால், அவர்கள் யாரானாலும் அவர்களை எதிர்த்து நின்று ஜெ. மோதுவார். “தமிழகத்தில் பி.ஜே.பி. ஒரு எம்.பி.. தொகுதியில்கூட வென்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் ஜெயலலிதா. நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் பி.ஜே.பி-க்கு எதிராக ஜெயலலிதா வியூகம் வகுத்தார்” என சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா. 2014-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வாய்ப்பு நழுவிவிட, 2019-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கும் முனைப்பில் இப்போதே தீவிரமாக இருக்கிறது பி.ஜே.பி. இதற்கு நடுவில் டி.டி.வி. தினகரன் என்னவெல்லாம் செய்யப்போகிறார்? என்பதுதான் அடுத்தக்கட்ட 'ட்விஸ்ட்.' 

இவர்கள் 'சைரன்' வைத்த கார்களில் பறக்கலாம்.. வார்னிஷ் செய்த பலகைகளில் ‘மாண்புமிகு அமைச்சர்’ என போட்டுக்கொள்ளலாம்… காவல்துறை சல்யூட்களை ஏற்றுக்கொள்ளலாம்… இன்னும் என்னவெல்லாமோ, அவை அனைத்தையும் அனுபவித்துக்கொள்ளட்டும். ஆனால், விரைவில் இவர்கள் மக்களைச் சந்தித்தாக வேண்டும்… அப்போது, ‘இரட்டை இலை’ சின்னத்துக்குப் பதிலாக ‘முகமூடி’ சின்னம் வாங்கிவந்து தங்களின் முகத்தைக் காட்டாமல் வாக்கு கேட்பார்கள் போல!


டிரெண்டிங் @ விகடன்