வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (22/08/2017)

கடைசி தொடர்பு:16:24 (12/07/2018)

நடுக்கடலில் தமிழக மீனவர்களிடையே மோதல்!

தடைசெய்யப்பட்ட வலைகளில் மீன்பிடித்த நாகை மாவட்ட மீனவர்களைத் தொண்டி மீனவர்கள் சிறைபிடித்தனர்.

தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடித்த படகு

கடல் வளத்தினையும், அரிய கடல் வாழ் உயிரினங்களையும் அழிக்கும் வகையில் இரட்டை மடி, சுருக்கு மடி போன்ற வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், குறைந்த நேரத்தில் அதிக அளவில் மீன்களைப் பிடிப்பதற்காக சில மீனவர்கள் இந்த முறையில் மீன்பிடித்துவருகின்றனர். இதனால், மீன்வளம் அழிவதுடன் கடலையே நம்பியுள்ள நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

இதனால், நாட்டுப்படகு மீனவர்களுக்கும் விசைப்படகு மீனவர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடப்பதுண்டு. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள், இரண்டு விசைப்படகுகள்மூலம் இன்று காலை இரட்டை மடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, தொண்டியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால், இரு தரப்பைச் சேர்ந்த மீனவர்களுக்கிடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டுள்ளது  இந்த மோதலில், இரு தரப்பு மீனவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த ஒரு விசைப்படகையும் அதில் இருந்த சுப்பிரமணியன், சித்திரவேலு, முருகன், முத்துராக்கு, அஞ்சப்பன், அசோக், சஞ்சீவிகுமார், சுமான், அரி, ஆகிய மீனவர்களையும் தொண்டி புதுக்குடியிருப்புப் பகுதி மீனவர்கள் சிறைபிடித்தனர். பின்னர், இவர்களை தொண்டியில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 

இரு தரப்பு மீனவர்களிடையே நடந்த மோதல்குறித்து, கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.