'இரும்புக் கோட்டையில் துருவுக்கு என்ன வேலை..?'- பன்னீர்செல்வத்தை சீண்டும் நாஞ்சில் சம்பத் | Nanjil Sampath accuses O.Pannerselvam

வெளியிடப்பட்ட நேரம்: 14:36 (22/08/2017)

கடைசி தொடர்பு:14:41 (22/08/2017)

'இரும்புக் கோட்டையில் துருவுக்கு என்ன வேலை..?'- பன்னீர்செல்வத்தை சீண்டும் நாஞ்சில் சம்பத்

அ.தி.மு.க-வில் தொடர் உட்கட்சிப் பூசல் நடந்துவரும் நிலையில், சென்னை அடையாறில் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், செய்தியாளர்களைச் சந்தித்தார். 

நாஞ்சில் சம்பத்

அப்போது அவர், 'வாக்கெடுப்பு நடத்தும்போதுதான் எங்கள் நிலைப்பாடு பற்றித் தெரியும். வெறும் 19 எம்.எல்.ஏ-க்கள் அல்ல, இனி எண்ணிக்கை அதிகரிக்கவேசெய்யும். பொதுச் செயலாளருக்குத்தான் எல்லா அதிகாரமும் இருக்கிறது. அவர் யார் மீது வேண்டுமானாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். இன்று ஒரு நம்பிக்கைத் துரோகியை கட்சியிலிருந்து நீக்கியுள்ளோம். அறுவை சிகிச்சையை இன்றுதான் ஆரம்பித்துள்ளோம். அ.தி.மு.க-வை காட்டிக்கொடுத்து, கட்சி சின்னத்தை முடக்கிய ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதல்வராக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இரும்புக் கோட்டையில் துருவுக்கு என்ன வேலை. ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் சபையில் இடமா? அரசைக் கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. நடப்பது எங்கள் ஆட்சிதான். எங்களுக்கு ஆதரவாக 100 எம்.எல்.ஏ-க்களும் மேல் இருக்கிறார்கள். இனிமேல்தான் அதிசயங்கள் நிகழப் போவதைப் பார்க்கப்போகிறீர்கள்' என்று கூறியுள்ளார்.

முன்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்களும் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம்மூலம் தெரிவித்தனர். இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டுமென்று ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.