வெளியிடப்பட்ட நேரம்: 15:48 (22/08/2017)

கடைசி தொடர்பு:18:24 (22/08/2017)

“அமித்ஷா தமிழக வருகை ரத்து ஏன்..?” தமிழிசை செளந்தரராஜன் அடுக்கும் காரணங்கள்

அமித் ஷா

அமித்ஷா தமிழக வருகை ரத்தானது ஏன் என்பது குறித்து மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் விளக்கமளித்துள்ளார். மேலும், அவருடைய தமிழகம் வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

பி.ஜே.பி தேசிய தலைவர் அமித்ஷா, 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பெரிய மாநிலங்களில் மூன்று நாள்களும் சிறிய மாநிலங்களில் இரண்டு நாள்களும் யூனியன் பிரதேசங்களில் ஒருநாளும் என்று அவர் சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் இருந்து தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய அமித்ஷா, மே 10, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளில் தமிழக பி.ஜே.பி தயாராகிக் கொண்டிருந்தது. சென்னையிலும், கோவையிலும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது, ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, ஓட்டுக்குப் பணம் கொடுத்த புகாரில் முதல்வர் எடப்பாடி உள்பட ஆளும் கட்சி வி.ஐ.பி-க்கள் சிக்கியது, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டி.டி.வி.தினகரன் கைது, தழகத்தில் விவசாயிகள் போராட்டம்' என்று பல பிரச்னைகள் அப்போது உச்சத்தில் இருந்ததால் அமித்ஷா வருகை ரத்தானது. 

தமிழிசை

இந்நிலையில், மூன்று மாதங்கள் கழித்து... அமித்ஷா வருகை ஆகஸ்ட் 22, 23, 24 ஆகிய தேதிகளில் இருக்கிறது என்று தமிழக பி.ஜே.பி அறிவித்தது. அமித்ஷாவை வரவேற்க தடபுடல் ஏற்பாடுகள் தயாராயின. அமித்ஷாவின் மூன்று நாள்கள் சுற்றுப்பயணத் திட்டமும் அதிகாரப்பூர்வமாக வெளியானது. கடற்கரைச் சாலையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பது, மீனவர் வீட்டில் காலை உணவு சாப்பிடுவது, கலைவாணர் அரங்கத்தில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுவது, கோவையில் தொழிலதிபர்களைச் சந்திப்பது என்று அவர்களுடைய நிகழ்ச்சி நிரல்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் அணிகளின் இணைப்பும் உறுதியான நிலையில் திடீரென்று அமித்ஷாவின் தமிழக பயணம் ரத்தானது. அணிகள் இணைந்து துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர். மேலும், அமித்ஷா வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதற்கு பி.ஜே.பி முதல்வர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடானதுதான் காரணம் என்று அவர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், அதைத் தமிழக எதிர்க் கட்சியினர் கிண்டலடித்துள்ளனர். 

அமித் ஷா

டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், “கட்சியின் அகில பாரத தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகையை முன்னிட்டுச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆகஸ்ட் 20 -ம் தேதி டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டமும் அதைத் தொடர்ந்து பல்வேறு முக்கியக் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டதன் காரணமாக, 95 நாள்கள் நாடு முழுவதும் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் பகுதியாகத் தமிழகம் வரவிருந்த பயணம் தள்ளிவைக்கப்பட்டது. அமித்ஷாவின் தமிழக வருகைக்காக உற்சாகமாகச் சிறப்பான ஏற்பாடுகளைக் கடந்த சில நாள்களாக மெய்வருத்தம் பாராமல் கண் உறங்காமல் வெயிலும் மழையும் ஒன்றே எனக் கருதி களப்பணி ஆற்றிய தாமரை நெஞ்சங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அமித்ஷா வருகை பற்றிய தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும். அப்போது, இப்போது செய்திருந்ததைவிட இன்னும் சிறப்பான வரவேற்பை அளிப்போம். தமிழகத்தில் தாமரை மலர வேண்டும். அதற்கான சபதம் ஏற்போம்; சாதித்துக் காட்டுவோம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்