Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கவிழாமல் செல்லுமா எடப்பாடி பழனிசாமி கப்பல்?

எடப்பாடி உடன் ஆளுநர், ஓ.பி.எஸ்

'தமிழ்நாடு அரசு' என்னும் கப்பலின் பங்குதாரர்களாக பி.ஜே.பி. தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி இந்தக் கப்பலின் மாலுமியாகவும், துணை மாலுமியாக ஓ.பன்னீர்செல்வமும் இருந்து வருகிறார்கள். கப்பல் எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்று திசை காட்டும் கருவியாகவும், கப்பல் உரிமையாளர்களின் பிரதிநிதியாகவும் சிறப்பாகச் செயல்படுகிறார் ஆடிட்டர் குருமூர்த்தி.

அ.தி.மு.க. அணிகள் இணைந்த பின், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், மாஃபா பாண்டியராஜன் அமைச்சராகவும் பொறுப்பேற்றதை டி.டி.வி தினகரன் தரப்பு விரும்பவில்லை. அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம், இன்று அல்லோலகல்லோலப் பட்டுக் கிடக்கிறது.

தமிழகத்தில் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் சட்டசபைத் தேர்தல் வருவதாக இருந்திருந்தால், நிலைமையே தலைகீழாகச் சென்றிருக்கும். ஆனால், அ.தி.மு.க. அரசுக்கு இன்னும் 4 ஆண்டுகள் வரை ஆட்சிக்காலம் உள்ளது. அதுவரை, இந்த ஆட்சிக்கப்பல் பயணிக்குமா? மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, கப்பலின் மாலுமியும், துணை மாலுமியும் சரியான இலக்கை நோக்கி கப்பலைச் செலுத்துவார்களா? என்பது நூறுமில்லியன் கேள்வி.

எடப்பாடி - ஓ.பன்னீர்செல்வம்'மாண்புமிகு அம்மா வழியில்' இந்த ஆட்சி நடைபெறுவதாக ஒருபுறம் கூறிக்கொண்டே, மறுபுறம் சத்தமில்லாமல், நீட் தேர்வு, ஜி.எஸ்.டி, உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின்திட்டம், மதுரவாயல் - எண்ணூர் பறக்கும் சாலைத் திட்டம் போன்ற அனைத்திற்கும் ஒப்புதல் அளித்தது இதே ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்-தான். மேற்கண்ட இந்தத் திட்டங்கள் அனைத்தையும் ஜெயலலிதா எதிர்த்து வந்தார் என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே.

ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள பி.ஜே.பி. 'தகிடுதத்தம்' போட்டும் பயன் இல்லாமல் போய் விடவே, அவரது மறைவை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டது. ஓ.பி.எஸ். துணை முதல்வராகப் பதவியேற்றதும், ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். கரங்களைப் பிடித்து கைகுலுக்க வைத்ததே இதற்குச் சாட்சி எனலாம். 

சரி. அ.தி.மு.க அணிகள் இணைப்பை விரும்பாத தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்து கடிதம் அளித்துள்ளனர். தமிழக மக்கள் நலனுக்கு எதிராகவும், தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையை குலைக்கும் வகையிலும் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டதால், ஏற்கெனவே தாங்கள் அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டிருப்பதாக அந்தக் கடிதங்களில் 19 எம்.எல்.ஏ-க்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான ஆளுநர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

அ.தி.மு.க-வில் மொத்தம் உள்ள 134 எம்.எல்.ஏ-க்களில் (சபாநாயகர் தனபால் தவிர்த்து) 19 பேர் எடப்பாடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த அரசுக் கப்பல் தனது முழு பதவிக்காலமும் கவிழாமல், தத்தளிக்காமல் சுமூகமாகப் பயணிக்குமா? என்பதை அந்தக் கப்பலின் உரிமையாளர்களும், கப்பல் நிறுவனத்தின் தலைமை தமிழக நிர்வாகியாகச் செயல்படும் கவர்னரும் தான் தீர்மானிக்க வேண்டும். 

அரசுக்கப்பல் கவிழாமல் பயணிக்க மாலுமி, துணை மாலுமி உள்பட 117 எம்.எல்.ஏ-க்கள் தேவை. ஓ.பன்னீர்செல்வம் அணியினரையும் சேர்த்து 114 எம்.எல்.ஏ-க்கள் வரை எடப்பாடி அரசுக்கு ஆதரவு இருந்தாலும், அரசைக் காப்பாற்ற, அதாவது கப்பல் கவிழாமல் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரை, தொடர்ந்து பயணிக்க இன்னமும் இரண்டு அல்லது மூன்று எம்.எல்.ஏ-க்கள் தேவை.

தவிர, அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு மீண்டும் கொண்டுவரப்பட்டால், அரசுக் கப்பல் கவிழாமல் காப்பாற்ற மாற்று யோசனைகளையும் கப்பல் உரிமையாளர்கள் வைத்திருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

எப்படி இருந்தாலும், கப்பலை கரைசேர்ப்பதில்தான் மாலுமிகளின் கவனம் இருக்குமே ஒழிய, கடலில் வாழும் மீன்கள் மற்றும் உயிரினங்களைப் போன்ற தமிழக மக்களின் நலன் மீது ஒருபோதும் அக்கறை இருக்கப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.

கப்பல் கவிழ்ந்தாலும், கரை சேர்ந்தாலும் மக்கள் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரியில் இருந்து எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை!
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement