வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (22/08/2017)

கடைசி தொடர்பு:18:16 (22/08/2017)

‘‘போன், வாட்ஸ் ஆப், எஸ்.எம்.எஸ்.ல முத்தலாக் சொல்வதை குரானோ இஸ்லாத்தோ ஆதரிப்பதில்லை’’ - கவிஞர் சல்மா #TripleTalaq

முத்த்லாக்

'இஸ்லாமிய விவாகரத்து முறையான 'முத்தலாக்' முறை சட்ட அங்கீகாரமற்றது’ என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, பல தளங்களிலும் விவாதப்பொருளாகியிருக்கிறது.  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ். கேஹர் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ‘இந்தப் பிரச்னையில் முத்தலாக் ஒழுங்குமுறை சட்டத்தை ஆறு மாதங்களுக்குள் இந்திய அரசு இயற்ற வேண்டும்’ எனவும் வலியுறுத்தியுள்ளது.

இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின்படி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் தன் மனைவியை விவாகரத்து செய்ய மூன்று கால இடைவெளியில் ‘தலாக்’ கூறும் முத்தலாக் முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறை தற்போது தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முத்தலாக் முறையைக் கொண்டு விவாகரத்து செய்யப்படும் பெண்கள் குழந்தைகளுடன் பரிதவித்து வருவதாகவும், இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உச்ச நீதிமன்றத்தில் 7 மனுக்கள் தொடரப்பட்டுள்ளன. இதில் 5 ரிட் மனுக்களை இஸ்லாமியப் பெண் ஒருவர் தாக்கல் செய்தார். 

இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அரசியல் சாசன அமைப்பு விசாரணை நடத்தியது. உச்சநீதிமன்றம் சார்பாக, இந்திய அளவில் இயங்கும் முஸ்லிம் அமைப்புகள், முஸ்லிம் பெண்கள் அமைப்புகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. முத்தலாக் முறையை நேரில் சொல்லாமல் தவறாகப் பயன்படுத்தி ஸ்கைப், வாட்ஸ்ஆப்  மூலம் சொல்லி ஆண்கள் விவாகரத்து செய்வதாக பெண்கள் அமைப்பு குற்றம் சாட்டின. இந்த பின்புலத்தில்தான் ‘முத்தலாக் முறை சட்ட அங்கீகாரமற்றது’ என்ற தீர்ப்பை தற்போது வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். 

இது குறித்து கவிஞர் சல்மா தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். ‘’குர் ஆனில் சொல்லப்பட்டிருக்கிற முத்தலாக் பற்றி முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கணவர் ஒருவர், மனைவியை பிரிய முடிவெடுத்த பின், முதல் தலாக் சொல்வார்கள். தலாக் சொல்லிய நாளில் இருந்து அடுத்த மாதவிடாய் காலம் வரை அவர்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ வேண்டும். இந்தக் காலகட்டத்தில் அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கான அறிவுரைகளை பெரியவர்கள் வழங்குவார்கள். மாதவிடாய் காலம் என்பது, அந்தப் பெண் கருவுற்றிருக்கிறாளா என்பதை அறிந்து கொள்வதற்கான கால இடைவேளையும்கூட. மாதவிடாய் காலம் முடிந்த பின்னர் அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டால் சேர்ந்து கொள்ளலாம். அப்படியும் சமாதானம் ஏற்படாமல் போனால் இரண்டாவது தலாக் சொல்லப்படும். அதற்கு அடுத்து மீண்டும் ஒரு மாத காலம் இருவருக்கும் தங்கள் முடிவை பரிசீலிக்க அவகாசம் கொடுத்த பின்னரே, கணவர் மூன்றாவது தலாக் சொல்ல வேண்டும். முத்தலாக் சொல்லியப்பிறகு மனைவியை பிரிய கணவருக்கு அனுமதி கிடைக்கும்.  

தற்போதைய சூழலில் வடமாநிலங்களில் சிலர் செல்ஃபோன், எஸ்.எம்.எஸ், வாட்ஸ்ஆப்பில் தலாக் சொல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் இதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். இதுபோல் முறையற்ற, அறமற்ற வழியில் முத்தலாக் சொல்வதை இஸ்லாமோ, குர்ஆனா அனுமதிப்பதில்லை. ஏதோ ஓர் இடத்தில் இருந்தபடி தகவல் தொடர்ப்புச் சாதனங்களின் வழியாக முத்தலாக் சொல்லி பெண்ணை விவாகரத்துச் செய்யும் முறை இஸ்லாத்தில் கிடையாது.  

இஸ்லாத்தில் சொல்லப்படும் பல விஷயங்கள் நடைமுறையில் பின்பற்றப்படுகிறதா என்பது கேள்விக்குறியே. இஸ்லாமியப் பெண்கள் போர் புரிந்துள்ளனர். கல்வியில் சிறந்து விளங்கியுள்ளனர். ஆனால் இன்றோ பல பெண்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டிய அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதுபோன்ற முரண்பாடுகளும் தொடர்கின்றன. முத்தலாக் விஷயத்தில் உண்மையில் குர் ஆன் என்ன கூறியுள்ளது, நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டியுள்ளது’’ என்கிறார் சல்மா. 

முத்தலாக்

இஸ்லாமிய சமூக ஆர்வலர் அப்துல் சாகிப் இந்தத் தீர்ப்புக் குறித்து கூறுகையில், ‘’நபிகள் நாயகம் வகுத்துள்ள சட்டங்கள் விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை. குர் ஆனில் சொல்லப்பப்பட்டிருக்கும் அனைத்துமே உண்மை. இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமைகள், சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கணவன், தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகள், மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகள் எல்லாமே குர் ஆனில் வகுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொள்ளாமல் சில மூடர்கள்தான் குழப்பம் விளைவிக்கிறார்கள்.

பிராக்டிக்கலாக யோசித்துப் பாருங்கள்... போனில் தலாக் செல்வதாக வரும் குற்றச்சாட்டுகள் நம்பத்தகுந்தவையாகவா இருக்கின்றன? ஏதாவது ஒரு சில இடங்களில் இதுபோல் நடந்திருக்கலாம். ஆனால் அதையே அடிப்படையாகக்கொண்டு விவாதமாக்கும் இஸ்லாத்தையே புரிந்துகொள்ளாத முஸ்லிம்கள் உள்ளனர் என்பதைத்தான் இதுபோன்ற நிகழ்வுகள் காட்டுகின்றன. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்