பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி விவசாயிகள் நடத்திய பேய் ஓட்டும் போராட்டம்!

நிலுவையிலுள்ள வறட்சி நிவாரணத்தொகையை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாரதீய கிசான் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேப்பிலை, உடுக்கை அடித்துப் பேய் ஓட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பேய் ஓட்டும் போராட்டம்

பயிர்க்காப்பீட்டுக்காகக் கடந்த 2015-16 மற்றும் 2016-17 ஆகிய ஆண்டுகளில் விவசாயிகள் செலுத்திய பயிர்க்காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போதுவரை வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கிட வேண்டும். விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்யக்கோரி  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு செய்துள்ள மேல்முறையீட்டை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு பாரதீய கிசான் சங்க விவசாயிகள் பேய் ஓட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பேய் ஓட்டும் போராட்டம்

இதில், கலந்து கொண்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காத மத்திய, மாநில அரசைக் கண்டித்து உடுக்கையடித்து கையில் வேப்பிலையை ஆட்டி சாம்பலைத் தூவி விவசாயிகள், பேய் ஓட்டும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!